Breaking News

தியாகி திலீபனின் நினைவு நிகழ்வை குழப்பும் வகையில் காப்புறுதி நிகழ்வு இடம்பெறவில்லை. – கஜேந்திரன் குற்றம்சாட்டுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் பதிலடி !

திலீபனின் நினைவு தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெறும் என்று செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து முற்பகல் 10.40 மணிக்கு அனுஷ்டித்த பின்னரே காப்புறுதி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் நேரம் பிந்தி நினைவு தினம் இடம்பெற்றது. 



காப்புறுதி தின நிகழ்வுக்கு மாநகர சபை அனுமதி வழங்கியிருந்தது. எனது ஏற்பாட்டில் கொண்டாடப்படவில்லை. நானும் காப்புறுதியில் பணியாற்றுவதால் அந்த நிகழ்வில் பங்குபற்ற வேண்டியதாக இருந்தது. நான் மட்டுமல்ல காப்புறுதியில் பணியாற்றும் 600 இற்கு மேற்பட்ட தமிழ் ஊழியர்கள் அதில் கலந்து கொண்டனர். இப்படி இருக்கும் போது அஞ்சலி நிகழ்வில் எனது பெயரை மட்டும் குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் அநாகரிகமான முறையில் பேசியுள்ளார் என்று வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் தெரிவித்தார்.

யாழ். நல்லூரில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற திலீபனின் ஆரம்ப நினைவு நிகழ்வில் திலீபனின் நிகழ்விற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திலீபனின் நினைவிடத்துக்கு முன்னால் காப்புறுதி தினம் கொண்டாடப்பட்டதாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட்டையும் விமர்சித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் உரையாற்றியிருந்தார். இவரின் இந்த கருத்து சம்பந்தமாக ஆனோல்டிடம் தொடர்பு கொண்டு  செய்தியாளர்  கேட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது...
காப்புறுதியை தேசிய நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற முன்மொழியை வைத்து கடந்த வருடம் ஒவ்வொரு கம்பனிகளுக்கும் அந்த நடைமுறையைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டன. ஆந்த வகையில் இந்த வருடத்துக்கான தேசிய காப்புறுதி தினத்தை கொண்டாட 15.09.2017 நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை யாழில் அமைந்துள்ள  எல் ஐ சி  காப்புறுதி  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஏற்கனவே பிரகடனப்படுத்தியபடி நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்வினை நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர். அனுமதியின் படி சகல காப்புறுதி ஊழியர்களுடன் இந் நிகழ்வு ஆரம்பமானது.
இதற்கு அருகாமையில் தியாகி திலீபனின் 30 ஆவது நினைவு தினம் நினைவிடத்தில் இடம்பெற்றது. இதனால் குறித்த நேரத்தில் காப்புறுதி நிகழ்வை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு நாங்கள் சற்று கால அவகாசம் கேட்டிருந்தோம் ஆகவே 9.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந் நிகழ்வு முற்பகல் 10.40 இற்குப் பிறகுதான் ஆரம்பமானது.
இந் நிகழ்வு தியாகி திலீபனின் நினைவு நிகழ்வை குழப்பும் வகையில் இடம்பெறவில்லை. புனிதமான இடத்தில் நின்று கொண்டு அனைத்து தமிழ் ஊழியர்கள் கலந்து கொண்ட நிகழ்வை இழிவுபடுத்தி நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் இழிவுபடுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் அநாகரீகமான முறையில் செயற்பட்டுள்ளார். திலீபனின் புனிதமான இடத்தில் இவ்வாறான அரசியல் செயற்பாடுகள் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை ஆனால் கஜேந்திரனின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு எனக்கு கவலை அளிக்கிறது.
நிகழ்வு முடிந்ததும் திலீபனின் நினைவிடத்தில் அனைத்து காப்புறுதி ஊழியர்களும் அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் சென்றோம் என்றார்.


No comments