Breaking News

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கின்றபோது காலத்திற்கு காலம் மாற்றமடையாத வகையில் தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணிகள், வீதி திருத்த வேலைகள் மற்றும் புதிய பாதைகளை அமைத்தல் அவற்றின் நிதி நிலைமைகள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயிலிருந்து குருநாகல் வரையிலான பகுதி மற்றும் கடவத்தையிலிருந்து மீரிகமை வரையான பகுதியை 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார். கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையிலான பகுதியின் நூற்றுக்கு ஐம்பது வீதமான நிர்மாண வேலைகள் இவ்வருடத்தில் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து ஊடகங்களில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்த ஜனாதிபதி, திறந்த ஊடக் கலந்துரையாடலின் மூலம் அல்லது ஊடகங்களுக்கு சரியான தகவல்களை வழங்கி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வெளிப்படைத் தன்மையுடன் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி அபிவிருத்தியின் கீழ் வட மாகாண அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப்பணிகளுக்கான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான கடனுதவியை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலிருந்து இலகுவாக கொழும்புக்கு வந்து சேரக்கூடியவகையில் அதிவேக நெடுஞ்சாலை அல்லது உயர்தரத்துடன்கூடிய நெடுஞ்சாலையை நிர்மாணிப்பது குறித்தும் திட்டமொன்றை விரைவாக தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வீதி அபிவிருத்தி மற்றும் மேம்பாலங்கள் திட்டத்திற்காக தேசிய மற்றும் வெளிநாட்டு ஏற்பாடுகள் கிடைக்கும் முறை தொடர்பாக வினவிய ஜனாதிபதி, அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்புடைய வகையிலும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கவனத்திற்கொண்டும் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பது தொடர்பாக திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டினார்.

எழுச்சி பெறும் பொலன்னறுவை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இடம்பெறும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் கொழும்பு, கடவத்தை, நிட்டம்புவ வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் வினவிய ஜனாதிபதி, அப்பணிகள் தாமதமடைந்திருப்பது குறித்து கவனம் செலுத்தியதுடன் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து அந்த நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இணைந்த வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தியில் வீதி அபிவிருத்தி மிகவும் முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கிராம மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பார்க்கிலும் அதிவேகமில்லாத வீதி அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஸ்பைன் மேம்பாலத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கனேமுல்ல, பொல்கஹவெல மற்றும் ராஜகிரிய மேம்பாலங்களின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பை அண்மித்த அத்துருகிரிய, கொட்டாவ, கொடகம பிரதேசங்களில் சவூதி அரேபியா மற்றும் ஒபெக் அமைப்பின் கடன் உதவியின் கீழ் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் அமைச்சர் லக்ஷ்மன் கிரயெல்ல, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments