Breaking News

எங்கள் பிள்ளைகள் எங்கே..? உயிருடன் இருக்கின்றார்களா..? கிளிநொச்சியில் கண்ணீருடன் தாய்மார்கள்

படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே..? அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா..? எங்கே இருக்கின்றார்கள்..? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளார்களா..?

அவ்வாறு கொலை செய்திருந்தால் எதற்காக கொலை செய்தீர்கள்..? இந்த கேள்விகளுக்கு இலங்கையின் ஆட்சியாளர்களும், படையினரும் எமக்கு பதில் சொல்லவேண்டும். அந்த பதிலை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் பெற்றுக் கொடுக்கவேண்டும்.

அவ்வாறான பதிலை பெற்றுக் கொடுக்காவிட்டால் எங்களுடைய சாவுக்கு இலங்கையின் ஆட்சியாளர்களும், படையினரும் மட்டுமல்ல, ஐ.நா மனித உரிமைகள் ஆணையகமும் பொறுப்பேற்க வேண்டும்.


எங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைத்ததற்கு உயிருள்ள சாட்சிகள் எங்களிடம் இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மட்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,

2009ஆம் ஆண்டு போர் நிறைவு கட்டத்தில் எங்களுடைய பிள்ளைகளை படையினரிடம் கையளித்தோம்.

அவ்வாறு கையளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவ்வாறு கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள் குற்றவாளிகள் என்றால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.

அதனை செய்யாமல் நாங்கள் கையளித்த பிள்ளைகள், எங்களுடைய உறவுகள் எங்கே என்றே தெரியாது என கூற இயலாது. அதுவும் ஒரு நாட்டின் படையினர் அந்த பதிலை வழங்க இயலாது.

இதனையே கடந்த 8 வருடங்களாக இலங்கையின் ஆட்சியாளர்களிடமும், சர்வதேச நாடுகளிடமும் கேட்டு வருகின்றோம். ஆனால் அவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் எமக்கு கிடைக்கவில்லை.

எங்கள் பிள்ளைகள் எந்த தடுப்பு முகாமில் அல்லது எந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் கூறியே ஆகவேண்டும்.

இனிமேலும் பொறுமை காப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. அரசாங்கமும், ஆட்சியாளர்களும் எங்களுடைய கேள்விகளுக்கு தக்க பதிலை தரவேண்டும் என உறவினர்கள் கூறினர்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக காணமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பாக யோ.கலா என்ற தாய் கூறுகையில்,

“எனது மகனை 2009.03.25ஆம் திகதி இறுதியாக முள்ளிவாய்க்காலில் கண்டேன்.


பின்னர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது புல்மோட்டை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக எனது மகன் வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எனக்கு கூறியிருந்தார்.

அதன் பின்னர் 2015.07.07ஆம் திகதி வரை எனது மகன் தொடர்பாக பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவும் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள்.

இறுதியாக வந்தபோது எனது மகனுடைய அடையாள அட்டை இலக்கத்தை கேட்டு பெற்றுக் கொண்டதுடன், எனது மகன் விரைவில் என்னிடம் வருவதற்கு இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள் எனவும் கூறினர்.

ஆகவே எனது மகன் உயிருடன் இருக்கின்றான். என்னுடைய மகன் மட்டுமல்ல இங்குள்ளவர்களின் உறவுகள் அனைவருமே உயிருடன் இருக்கிறார்கள். இருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கையிலேயே கடந்த 11 நாட்களாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றோம். இதற்கு ஆட்சியாளர்கள் தகுந்த பதிலை வழங்க வேண்டும்.

அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் பெற்று கொடுக்கவேண்டும். இல்லையேல் எமது சாவுக்கு இலங்கையின் ஆட்சியாளர்களும், படையினரும் மட்டுமல்லாமல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகமும் பதில் சொல்லவேண்டும் என்றார்.

இதேபோல் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பாக ஆ.லீலாதேவி என்ற தாய் கூறுகையில்,

2009.05.15ஆம் திகதி மதியம் 01.10 மணிக்கு என்னுடைய மகன் ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து படையினரிடம் கையளிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் காணாமல் ஆக்கப்பட்டார். என்னுடைய மகன் படையினரிடம் கையளிக்கப்பட்டதற்கு என்னிடம் உயிருள்ள சாட்சி இருக்கின்றது.

இலங்கையின் ஆட்சியாளர்களிடம் அந்த சாட்சிகளை காட்டுவதற்கு நான் விரும்பவில்லை. பலர் என்னிடம் கேட்டார்கள். அந்த சாட்சியை கொண்டுவாருங்கள் என, ஆனால் நான் காட்டவில்லை. காட்ட விரும்பவுமில்லை.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் மட்டும் அந்த சாட்சியை முற்படுத்துவதற்கு விரும்புகிறேன். காரணம் இங்கே சாட்சிகளுக்கு பாதுகாப்பே இல்லை என கூறினார்.

இதேவேளை தமது போராட்டம் தொடரும் எனவும் அரசாங்கம் தகுந்த பதிலை வழங்காமல் போனால் போராட்டம் வேறு வழிக்கு மாற்றப்படும். எனவும் அவர் கூறினார்.

No comments