Breaking News

தமிழ் மக்களின் எழுச்சியும் தலைமைகளின் நிலையும்!
கடந்த சில தினங்களாக தமிழகத்திலும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் சில மாற்றங்களை உணரக் கூடியதாக இருக்கின்றது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தடைக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சியும், அதன் தொடர்ச்சியாக அவர்களது வெற்றியும் அமைந்திருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள போதிலும் தீர்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இரண்டு போராட்டங்களுமே மக்களின் எழுச்சியால் நடைபெற்று வருகின்றனவே தவிர, அரசியல் சக்திகளின் வழிகாட்டுதலோ அல்லது தலைமையோ வழங்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள மக்கள் அனைவரும் ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டு போராடியே பழக்கப்பட்டவர்கள். மேலும் கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படையில் அந்த மக்கள் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை இழந்திருந்தனர். ஏற்கனவே இருந்த ஜனநாயக கட்டமைப்பை பயன்படுத்தி மாணவர்களும், இளைஞர்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து அதனை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றி வெற்றி பெற்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தாங்கள் பெரிதும் நம்பியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தங்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு போதிய அழுத்தங்களை அரசாங்கத்திற்கு பிரயோகிக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

இந்நிலையில், அரச படையினராலும், அவர்களது இராணுவ புலனாய்வு மற்றும் பொலிஸ் ஆகியோரின் பொறுப்பில் இருந்த தமது உறவுகள் அதிலும் குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பலரது கண்முன்னே அரசாங்கத்தினது வாக்குறுதிகளை நம்பியும், எச்சரிக்கைக்கு பயந்தும் கையளித்த தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பாக கடந்த ஆட்சியில் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவர்களது உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அப்பொழுது கூட்டமைப்பின் தலைவர் அந்த மக்களிடம் நாங்கள் அவர்களை மீட்டுத் தருவோம் என வாக்குறுதியளித்திருந்தார். அதன்பின்னரான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலின் போதும் அதே வாக்குறுதியை கூட்டமைப்பின் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாக்குறுதியளித்தார்.

இதனைப் போன்றே காணி விடயத்திலும் காணியைப் பறிகொடுத்த மக்களுக்கு அவற்றைப் பெற்றுத் தருவதாக வாக்குறுயளித்திருந்தார். 

நீண்டகாலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்திருந்தார். இத்தகைய சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பு தலைவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காட்சியளித்தார். யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் இன்னமும் இந்த விடயங்களில் தீர்வு காண முடியாத நிலை தொடர்கிறது. அரசாங்கம் தான் அளித்த உறுதிமொழியை காப்பாற்றவில்லை எனவும், தமிழ் தலைமைகளும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனவும் மக்கள் விரக்தியும், வேதனையும், குற்றவுணர்வும் மிகுந்தவர்களாக தாமே வீதியில் இறங்கிப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் போது தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்கள் போராட்டக்காரர்களை சந்திக்கச் சென்ற போது அவர்களை போராட்டக்காரர்கள் திருப்பியனுப்பி விட்டார்கள். இதனைப் போன்றே காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் தங்களது உண்ணாவிரதத்தின் பலனாக அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த போது அங்கு வருகை தந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர்கள் வெளியேற்றியிருந்தனர்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கட்சி அரசியல் தலைவர்கள் வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்திருந்தது வேறு விடயம். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் இன்னமும் முழுமையான ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்படாத ஒரு சூழலில் தமது பிரதிநிதிகளை வெளியேறுமாறு கோரியிருப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் விரக்தியையும், ஏமாற்றத்தையும், மனவேதனையையும், கோபத்தையையும் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின்னரான முதலமைச்சர்கள் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சக்திகளாக அல்லது தேசிய கட்சிகளின் அழுத்தக் குழுக்களாக செயற்பட்டிருந்தனர். 

இலங்கையில் தமிழ் தேசிய இனம் செறிந்து வாழுகின்ற வடக்கு, கிழக்கில் வடக்கு முதல்வர் நேரடியாகவும், சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் மத்திய அரசிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக அழுத்தத்தை பிரயோகிப்பவராக செயற்படுகிறார். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய அரசியல் கட்சி தலைமைகளின் பண்புகளுக்கு ஏற்ப அந்த மாகாண முதலமைச்சர் நெளிவு சுழிவுகளுடனான போக்கை கடைப்பிடிக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சர்கள் பிராந்திய கட்சிகளின் தலைவர்களாகவும், மாகாண மற்றும் கட்சியின் தீர்மானங்களை முடிவு செய்பவர்களாகவும் இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் மாகாண முதலமைச்சர்கள் கட்சியின் உறுப்பினர்களோகவோ அல்லது மத்திய குழு உறுப்பினர்களாகவோ இருக்கின்றனர். கட்சி சார்ந்து முடிவெடுக்கும் அதிகாரம் இவர்களிடம் இல்லை. கட்சி தமது கொள்கைகளுக்கு ஏற்ப இவர்களை வழிநடத்தியதாகவும் தெரியவில்லை. இவர்களின் கட்சித் தலைவர்கள் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இருக்கின்றனர். ஒருவர் அமைச்சராகவும், ஒருவர் எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கின்றார்

தற்போதைய சூழலில் தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா ஜெயராம் தனக்கு பின்னர் கட்சியைக் கொண்டு நடத்துவதற்கான ஒரு தலைமையை உருவாக்கியிருக்கவில்லை. அந்தக் கட்சி ஜெயலலிதா என்ற ஒரு தனிநபரைச் சார்ந்தே பாராளுமன்றம், தமிழக சட்டமன்றம் மற்றும் தமிழக உள்ளாட்சி மன்றங்கள் ஆகியவற்றுக்கான தேர்தல்களில் களமிறங்கி வெற்றி கண்டிருந்தது. ஆகவே, கட்சியில் எவருக்கும் தனிப்பட்ட ரீதியில் செல்வாக்கு இல்லாமல் இருந்தது. அந்த அம்மையார் மறைந்ததன் பின்னர் இன்று அந்தக் கட்சியினுடைய நிலையானது ஒரு கட்சி எப்படி கட்டமைப்புக்களுடன் செயற்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றது. மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு கட்சி இறுக்கமான கட்டமைப்பைக் கொண்டும் ஒரு தனிநபரை மட்டும் சாராமல் இருப்பதும் அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தமிழ் தலைமையைப் பொறுத்தவரையில் ஒரு தனிநபர் சார்ந்தே செயல்பாடுகள் அமைந்துள்ளன. கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளின் இணைவாக இருக்கின்ற போதிலும் அவர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை. அதேநேரம் தலைவர் தான் சார்ந்திருந்த கட்சி உறுப்பினர்களுடனும் விடயங்களை மனம்விட்டு பேசி கலந்துரையாடி முடிவுகளை எடுத்ததாக தெரியவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் நலன்சார்ந்து தான் முடிவுகளை எடுத்து செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் கூறுகின்ற போதிலும், மக்கள் அதனை ஏற்கத் தயாரில்லை. மக்களினுடைய இந்த நிலைப்பாட்டை உறுதி செய்வதாகவே மக்கள் போராட்டங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவரின் மௌனம் அமைந்திருக்கின்றது.

</p>
<p style="text-align: justify;">கேப்பாபுலவு, புலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இரவு, பகல் பாராமல் மழை, வெயில் பாராமல் பாதுகாப்பற்ற ஒரு சூழலில் கைக்குழந்தைகள் முதல் வயோதிபர் வரை குடும்ப சகிதமாக வைராக்கியத்துடன் போராடி வருகின்றனர். இவர்களது இந்தப் போராட்டம் மூன்று வாரங்களை கடந்துள்ளது. அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் கொடுக்கும் எதிர்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கும் தனக்கும் உள்ள நல்லுறவைப் பயன்படுத்தியோ அல்லது அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகளை வலியுறுத்தியோ தனது பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்தி அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வருவதில் இருந்து தோல்வி கண்டிருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாகவும், தமது காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என கோரி இரண்டு வாரங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களினுடைய இந்த நேரடிப் போராட்டங்களுக்கு பின்னரே அரசாங்கம் தனது மௌனத்தை கலைத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்து.

இது தவிர, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் செப்ரெம்பர் 24 ஆம் திகதி யாழில் நடந்த எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து கடந்த 10 திகதி மட்டக்களப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி மிகவும் உணர்வெழுச்சி பூர்வமாக நடந்திருக்கின்றது. இந்த பேரணியையும் அதில் கலந்து கொள்பவர்களையும் தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடும் பிரயத்தனங்களை செய்திருந்தது. 

ஆனாலும் அதனையும் மீறி மக்கள் திரண்டு வந்து வீதியில் இறங்கி தமது உரிமைக் குரலை எழுப்பியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழகத்தின் அரசியல் தலைமைகளின் வழிகாட்டுதல் இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. அதே தமிழகத்தில் ஒரு நபர் தலைமையின் வெற்றிடத்தினால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

வடக்கு, கிழக்கில் நன்கு கட்டமைக்கப்படாத அரசியல் கட்சி தலைமையின் காரணமாக திடமான ஒரு கொள்கையை வகுத்து தொடர்ச்சியாக செயற்பட முடியாத குழப்ப நிலை உள்ளது. இந்த நிலையில் மக்களின் எழுச்சி தலைவரை சிந்திக்க வைக்குமா..? அல்லது மாற்றுத் தலைமை தேவை என்பதை உணர்த்துமா;? பொறுத்திருந்து பார்ப்போம்.

--நரேன் 
  நன்றி....
 

No comments