Breaking News

யாழில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் அனைத்திற்கும் காரணம் இவர்கள்தான்! ஆதாரத்தோடு நிரூபிக்க தயார்!

யாழில் அண்மைக்காலமாக நிலவும் வாள்வெட்டு, மோசடி சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பின்னால் தொடர்புபட்ட அனைவரையும் தனக்கு தெரியும், இது தொடர்பிலான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த இரண்டு வருட காலமாக எந்தக் காலத்திலுமில்லாத வகையில் இணையத் தள மோசடி குறித்ததொரு விமர்சனம் யாழில் காணப்படுகின்றது.
அதனை இயக்கி வருகின்ற நபருடனான தொடர்பை இன்றிலிருந்து யாழ்.பலாலி படைத் தலைமையகம் கைவிட வேண்டும்.
இதனை நாங்கள் பலாலி இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்காவிடம் மிகவும் கெளரவமாகவும், விநயமாகவும் கேட்டுக் கொள்கின்றோம்.
யாழ்.பலாலி இராணுவத் தளபதியுடன் இணைந்து குறித்த நபர் தமிழ் மக்களுக்கெதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு உறுதுணையாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின் ஆசிரியர் செயற்பட்டு வருகிறார்.
குறித்த நபருக்குப் பின்புலமாக இராணுவம் காணப்படுகின்றது என்பதை நாம் முற்று முழுதாகக் கண்டறிந்துள்ளோம்.
குறித்த நபர் வடமாராட்சி மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் கட்டடம் நிர்மாணிப்பதாகத் தெரிவித்துப் பலரிடம் மோசடி செய்துள்ளார்.
குடாநாட்டில் நிலவும் அசாதாரண சம்பவங்களான வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கழிவோயில் அடிக்கின்ற சம்பவங்கள், கப்பம் பெறுதல் உட்படப் பல்வேறு சம்பவங்களிலும் பின்னணியாகவிருந்து செயற்படுகிறார்.
அவருக்குப் பின்னால் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ஐவர் பின்னணியாகவிருந்து செயற்படுவதை நாங்கள் இனங்கண்டிருக்கிறோம். இது தொடர்பான பலமான ஆதாரங்களும், சாட்சிகளும் எம் மத்தியிலுள்ளது.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்கள் திட்டமிட்டு வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஆனால், பொலிஸ் தரப்போ, பாதுகாப்புத் தரப்போ இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்களின் பின்னணி குறித்து அறிய முடியாதவாறு இன்று பல்வேறு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இன்று கண்ணியமான பிராந்தியப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஆகியோர் தொடர்பில் மிகவும் அகெளரவமான முறையில் சில இணையத்தளங்கள் செய்திகள் பிரசுரித்து அவர்களை மாசுபடுத்தியிருக்கின்றன. இதனால், அவர்கள் மெளனிக்கப்பட்டிருக்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு முன்வர வேண்டும். குடாநாட்டு மக்களும், ஊடகவியலாளர்களும் இராணுவத்தைப் பார்த்து விரல் நீட்டிக் கதைப்பதற்குக் காரணமானவர்களாக எட்டு நபர்கள் காணப்படுகின்றனர்.
குடாநாட்டில் இயல்பு வாழ்க்கையைக் கொண்டு வருவதற்குத் தடையாகவிருக்கின்ற எத்தகைய நபர்களாயினும் சட்டத்துக்கு முன்னிறுத்த முன்வர வேண்டும்.
யாழ்.பண்ணை பேருந்து நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எவரும் சொகுசாக பயணிக்க முடியாத அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது.
வழித்தட அனுமதிப் பத்திரமில்லாமல் பயணிக்கின்ற சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட பேருந்துகள் தற்போது சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
இவை தொடர்பான பின்னணிகளை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கும் மேலதிகமாக சட்ட விரோதமான ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு பிற்பகல் வேளையில் மதுபோதையில் பயணிகளுக்குப் பாலியல் தொந்தரவு, கப்பம் பெறுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற நிலைமைகள் நீடிக்கின்றன.
இதனால் பயணிகளுக்கும், பயணிகள் போக்குவரத்துச் சேவை அனுமதிப் பத்திரமுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றன.
இதற்குப் பின்னணியில் தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் ஒரு சில அதிகாரிகளின் ஊழல்களும் காணப்படுவது எம்மால் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் வடமராட்சியிலிருந்து பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பேருந்தில் மொரட்டுவ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி நெல்லியடி மாலுசந்தியிலிருந்து பெற்றோர்கள் ஆசனப் பதிவு செய்து வழியனுப்பி விட்ட வேளையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் பொலிஸார் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாழாகிவிடக் கூடாது என்பதற்காக குறித்த பிரச்சினையைத் தட்டிக் கழித்திருக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் பேருந்துகளில் எவ்வாறு பயணிகள் பாதுகாப்பாகப் பயணிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் கூறும் கருத்துக்கள் அனைத்தையும் நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் என்னிடம் காணப்படுகின்றன.
குடாநாட்டில் பல இளைஞர்கள் தற்போது பிழையான வழி நோக்கித் திசை திருப்பப்பட்டு வருகின்றார்கள். பாடசாலைகளின் பரிசளிப்பு விழாக்களுக்கு ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் ரூபா வரையான பணத்தைச் செலுத்தி விட்டு எமது இளைஞர்கள் மத்தியில் சமூகச் சீர்கேடுகளை விதைத்து வருகிறார்கள்.
இதில் முன்னின்று செயற்படுவர் ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலைச் சூத்திரதாரியான தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் நெருங்கிச் செயற்படும் ஆர். ஆர் என்பவராவார்.
இவர்கள் வவுனியாவில் மலர் மாளிகையில், கோவில் குளம் உமாமகேஸ்வரன் சமாதியிலும், அங்குள்ள முகாமொன்றிலும் பல கொடூரங்களை அரங்கேற்றியவர்கள்.
யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள புளொட் முகாம் 1995 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஜனாதிபதியாகவிருந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அந்த முகாமின் பின்பக்கத்திலுள்ள மலசலகூடக் குழியில் எத்தனை பேரை அடித்துப் புதைத்தார்கள்.
இவர்களெல்லாம் தமிழ்த் தேசியம் தொடர்பில் பேசி, சர்வதேச நீதி விசாரணைக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவார்கள்? அவ்வாறெனில் இவர்கள் செய்த கொலைகளை யார் விசாரிப்பது?, இவர்கள் செய்த அட்டுழியங்களை யார் விசாரிப்பது?, இனியாவது தமிழ்மக்களை நீங்கள் நிம்மதியாக வாழ விடுங்கள்.
எமது மக்கள் முன்னாள் அமரர் தர்மலிங்கத்தின் பெயரைத் தமது மனங்களில் வைத்திருக்கிறார்கள். அவருக்காகத் தான் எமது மக்கள் சித்தார்த்தனுக்கு வாக்களித்தனர்.
22 வரையான தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் தான் தற்போதைய குடாநாட்டின் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மிகப் பெரும் சூத்திரதாரிகள்.
இவர்கள் தேர்தல்களின் போது எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மூடி மறைப்பதற்காக இவ்வாறான குற்றச் செயல்களுடாக மக்களைத் திசை திருப்பி வருகிறார்கள்.
மக்களைச் சிந்திக்க விடுவதுமில்லை. நல்லாட்சியில் இருக்கின்ற பலன்களை அனுபவிக்க விடுவதுமில்லை. ஆகவே, நல்லாட்சி அரசின் எஞ்சிய மூன்று வருட காலத்தில் நன்மையான விடயங்கள் நடப்பதற்கு இவ்வாறானவர்கள் தடையாகவே காணப்படுகின்றனர், என மேலும் தெரிவித்தார்.

No comments