Breaking News

சூடுபிடிக்கும் அரசியல் களத்தில் விடுதலைப்புலிகள் ஏன்? - குழப்பத்தில் மக்கள்தொடர்ந்து இலங்கை பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தன. ஒவ்வோர் பிரச்சினையும் சுற்றி வந்தது நல்லாட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே.

அதற்காக இராணுவப் புரட்சி, இனவாதம், அந்நிய நாடுகளின் படையெடுப்பு போன்று பல்வேறு வகையான பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டன.

இவை அனைத்தும் ஒன்று சேர மறைந்து போக தற்போது விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகி விட்டார்கள் என்பதே புதிய பிரச்சினையாக உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.

ஆரம்பத்தில் பிக்குகள் இதனை கூறத் தொடங்க அவை அப்படியே ஆட்சிக்கு எதிரான அரசியல் தலைவர்கள் கூறத் தொடங்கினர்.

அனைத்தையும் தாண்டி இப்போது யுத்தத்தை நிறைவு செய்த தலைவனாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதியும் விடுதலைப்புலிகள் வந்து விட்டார்கள் என தெரிவித்து விட்டார்.

ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்த மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்று விப்பதே அவர் நோக்கமாகக் கூட இருக்கலாம். அதே போல் ஆரசியல் இலாபங்களுக்கு விடுதலைப்புலிகள் அவசியம் என்பதையும் நன்றாக அறிந்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

ஆரம்ப காலம் தொடக்கம் பார்க்கும் போது இலங்கையில் ஆரம்பமான பிரச்சினைகள் அனைத்தும் கடைசியாக வந்து நின்றது மகிந்தவிற்கு சாதகமாகவே என்பது தொடர் அவதானிப்பின் மூலம் தெளிவாகும்.

இனவாதம் பரப்பிய பிக்குகள் அடங்கி விட்டார்கள். இப்போது ஆரம்பமாகி உள்ளது புலிக்கதைகளே. வடக்கில் பாதுகாப்பு குறைந்து விட்டதே அங்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி.

ஆனால் வடக்கில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை, புலனாய்வுத்துறை பலவீனம் அடைய வில்லை என்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன.

அதேபோல் ஆட்சியை கட்டாயம் கவிழ்ப்பேன் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி, ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு என்பது கனவு மட்டுமே என்கின்றார் இப்போதைய ஜனாதிபதி.

தேர்தல் காலத்தை போன்ற சூடுபிடிக்கும் அரசியல் ஆட்டங்களே இப்போது காணப்பட்டு வருகின்றது. ஒருவர் திட்ட அதனை மற்றவர் மறுத்துக் கொண்டு வருகின்றாரே தவிர இலங்கையின் அபிவிருத்திப் பாதை தொடர்பில் கவனத்தில் எடுப்பவர் யார்?

அதேபோல் வடக்கு வாழ் தமிழர்களும் தென்னிலங்கை அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தப்பட்டு கொண்டு வரும் நிலையே இன்றும் தொடர்கின்றது.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச எவ்வாறாவது ஆட்சியை கவிழ்த்தே தீருவேன் என்ற நிலைப்பாட்டிலேயே விடாப்பிடியாக இருந்து வருகின்றார். கருத்து வெளியிட்டும் வருகின்றார்.

ஒரு வகையில் இவை அனைத்துமே நாட்டில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்த முயலும் செயற்பாடே. நாட்டு மக்களிடையே பதற்றத்தை தோற்று விக்கும் செயலே.

என்ற போதும் ஏன் இதனை இப்போதை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் மிகப்பெரிய கேள்விக்குறி.

குறிப்பாக கடந்த காலங்களில் ஆட்சி மாற்றம் அடைந்த போது எதிர்த்தரப்பு இத்தனை சீற்றம் கொள்ள வில்லை. அதேபோன்று மகிந்த ஆட்சி காலத்தில் அவரது ஆட்சியை கவிழ்க்க இத்தனை திட்டங்கள் தீட்டப் படவில்லை.

அவ்வகையில் பார்க்கும் போதும் இப்போதைய ஜனாதிபதியும் சரி, பிரதரும் சரி மகிந்தவிற்கு அடி பணிந்தா செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தொடர்ந்து பொறுமை காத்துக் கொண்டு வருவது ஏன்? மகிந்த கோடிகளை கொள்ளையிட்டார் நாட்டை பாதாளத்தில் தள்ளினார் என்று மேடைப் பேச்சுகளில் கூறிக்கொண்டிருக்கின்றார்களே தவிர.

தீர்ப்போ தீர்வோ கொடுக்க வில்லை. அப்படி பார்க்கும் போது அவர் மீது குற்றம் சுமத்தி தன் மீது உள்ள களங்கத்தை துடைத்துக் கொள்ளும் செயலா இப்போது நடைபெறுகின்றது.

அல்லது அனைவரும் இணைந்து செய்யும் அரசியல் நாடகமா இது என்பது மட்டும் புரியாமல் நாட்டு மக்கள் குழப்பத்தில் இருப்பதனை அவதானிக்க முடியும்.

ஆரம்பத்தில் புயல் போல வந்து வென்று காட்டுவோம் என களமிறங்கிய ஆட்சியாளர்கள் இப்போது ஆமை வேகத்தில் பயணிக்கின்றார்கள்.

எவ்வாறாயினும் சூடு பிடித்துள்ள அரசியல் ஆட்டத்தில் தற்போது விடுதலைப்புலிகளையும் களம் இறக்கியுள்ளார்கள். தொடர்ந்தும் இப்படியே ஆட்சி சென்று கொண்டிருக்குமானால் அரசியல் தலைவர்களை தவிர நாட்டின் அபிவிருத்திக்கும், மக்களுக்கும் நாமம் மட்டுமே கிடைக்கும் என்பது திண்ணம்.

No comments