Breaking News

அரசியல் பிரதிநிதிகளின் பொறுப்பற்ற செயலே மக்கள் வீதிக்கு இறங்க காரணம் : டக்ளஸ் தேவானந்தா

அரசியல் பிரதிநிதிகள் எமது மக்களது பிரச்சினைகளை தீர்க்க முன்வராத காரணத்திலேயே அவர்கள் இன்று வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், விக்ஸ் காட்டுப் பகுதி மக்களின் போராட்டம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 22ஆம் திகதி தங்களது குடியிருப்பினை உறுதி செய்து தருமாறு கோரி விக்ஸ்காட்டு மக்களின் போராட்டம் ஆரம்பமானது. இன்று அவர்களின் போராட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.

இப்பகுதியில் கடந்த 9 வருடங்களாக 47 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இவர்களது குடியிருப்புப் பகுதியானது வன இலாக்காவிற்கு உட்பட்ட பகுதி என வன இலாகாவினர் தெரிவித்துள்ளனர்

இதன் காரணமாக வன இலாக்காவினர் இம் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளனர்.

எனவே தங்களது குடியிருப்பினை இவர்களிடமிருந்து விடுவித்து, அதனை உறுதி செய்து தருமாறு கோரி மேற்படி போராட்டத்தை விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் முன்னெடுத்திருந்தனர்.

இம்மக்களது போராட்டத்தின் பயனாக உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள வவுனியா அரச அதிபர் ரோஹன புஷ்பகுமார, மேற்படி காணிகளை அம்மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன இலாக்காவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் இக்காணிகள் குறித்த மக்களுக்கு விரைவில் விடுவிக்கப்படுமென்றும், மேற்படி 47 குடும்பங்களுக்குமான வீட்டுத் திட்டம் உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அந்தவகையில், எமது மக்களின் நலன் கருதி மேற்படி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள வவுனியா அரச அதிபருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் அவர் மேற்படி நடவடிக்கைகளை விரைந்து செயற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மக்களின் தேவைகளை, பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவே எமது மக்கள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றனர்.

எனினும், அந்தப் பிரதிநிதிகளால் எமது மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றால், ஏன் இவ்வாறானவர்களை தங்களது அரசியல் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments