Breaking News

தமிழர்களின் உயரிய கலாசாரம் மிகவும் பெருமைக்குரியது: நரேந்திர மோடி



தமிழர்களின் உயரிய கலாசாரம் மிகவும் பெருமைக்குரியது என்றும் மத்திய அரசு தமிழர்களின் கலாசார விருப்பங்களைக் காப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இந்த விடயத்தைப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த கடந்த 19 ஆம் திகதியன்று, டெல்லி சென்று பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார்.

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வருவதை மத்திய அரசு ஏற்பதற்கு நடைமுறை சட்ட சிக்கல்கள் இருப்பதாக மோடி கூறியதாகத் தெரிவித்தார்.


இந்த விடயத்தில் தமிழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்றும் தன்னிடம் மோடி கூறியதாக பன்னீர்செல்வம் கூறினார்.

No comments