Breaking News

தமிழர்களும், முஸ்லிம்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து பொது விடயங்களில் ஒன்றுபடுமாறு பகிரங்க அழைப்புதமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனை தான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை யாழ்ப்பாணம் பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேலும் கூறுகையில்,

இந்த நாட்டிலே இரண்டு துருவங்களாக அரசியல் செய்து மாறிமாறி ஆட்சிக்கு வந்த பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து மக்களின் நலனுக்காக அரசமைத்து ஆட்சியை வழிநடத்தும் பாங்கை நாம் தற்போது காண்கின்றோம்.

அதே போன்று தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து இரண்டு சமூகங்களுக்கிடையே கசப்புணர்வுகளை ஏற்படுத்தியிருந்த போதும் அவைகளை ஒருபுறம் தள்ளிவைத்து விட்டு இரண்டு சமூகங்களின் நன்மைக்காகவும் பொதுவான அபிலாசைகளைப் பெறுவதற்காக நாம் ஓரணியில் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் நமக்கெழுந்துள்ளது.

கடந்த கால வரலாறுகளை நாம் படிப்பினையாகக் கொண்டு யுத்தத்தால் நாதியற்றுப் போன நமது சமூகங்களை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டு சரணடைந்த அல்லது இயக்கத்தை விட்டு வெளியேறி நிர்க்கதிக்குள்ளாகி நிற்கும் சுமார் 12,000 விடுதலைப் புலிகளின் வாழ்வியல் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பும் நம் கண்முன்னே நிற்கின்றது.

புனர்வாழ்வு பெற்ற புலிகளை சாதாரண மனிதராக ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை நமக்குள் ஏற்படுத்தி அவர்களையும் சமூகத்தில் சம அந்தஸ்து உடையவர்களாக வாழும் நிலைக்கு நாம் இட்டுச் செல்ல வேண்டும்.

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் தமது சொந்த மண்ணிற்கு அழைத்து அவர்களை சுதந்திர புருஷர்களாக குடியேற்றும் விடயத்திலும் நாம் கரிசனை காட்ட வேண்டும்.

இந்தியாவில் அகதிகளாக அகதி முகாமில் நீண்ட காலம் தங்கியுள்ள தமிழ்ச்சகோதரர்களை இந்த நாட்டுக்கு வரவழைத்து அவர்களைக் குடியேற்றும் விடயத்திலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொத்து, சுகங்களை இழந்து நடைப்பிணங்களாக அலைந்து திரியும் நமது மக்களின் வாழ்வியல் தேவைகளை இனம்கண்டு அவர்களுக்கு வளமான வாழ்கையை ஏற்படுத்தும் விடயத்திலும் நாம் அக்கறை செலுத்த வேண்டும்.

அதுமட்டுமன்றி வடமாகாணத்தில் யுத்தத்தால் அழிந்து போன பரந்தன் இரசாயன தொழிற்சாலை மற்றும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைகளை மக்கள் நலனுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் மீளக்கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடும் நமக்கு இருக்கின்றது.

இதன் மூலம் மாகாணத்திலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்க நடவடிக்கை ஏற்படுத்தலாம்.

திறமையும், ஆற்றலும் கொண்ட இளைஞர்களுக்கு தொழில்நுட்ப அறிவையும் பொருளாதார விருத்தி தொடர்பான திறன்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து ஐக்கியத்துடன் செயற்படுவதன் மூலம்தான் இந்த விடயங்களை நாம் சாத்தியமாக்க முடியும்.நமது சமூக அரசியல் தலைமைகள் இந்த விடயங்களில் கவனம் செலுத்தாவிட்டால் சமூகம் எங்களை துரோகிகளாகவும், மக்களின் நலன்களை புறக்கணித்தவர்களாகவும் இனம்கண்டு வரலாற்றில் நமக்கு முத்திரை குத்தும் என்பதை நான் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வடமாகாண முதலமைச்சரும், கிழக்குமாகாண முதலமைச்சரும் இவ்விரண்டு மாகாண சபையின் உறுப்பினர்களும், வடக்குக் கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு உழைப்போமாக இருந்தால் இவ்விரண்டு மாகாணங்களையும் அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மாற்ற முடியும்.

நமக்கிருக்கும் வளங்களும் சர்வதேசத்தின் பார்வையும் இதற்குச் சாதமாக இருப்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.

நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு மனிதநேயம் கொண்ட நற்பண்புள்ள ராஜித சேனாரத்ன போன்ற சிங்கள தலைவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும்.

அத்துடன் கைத்தொழில் அமைச்சராக இருந்த அமரர் ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கைத்தெழிற்சாலைகள் இன்று அழிவடைந்து, பொலிவிழந்து காணப்படுகின்றது.

வடக்கிலே மீண்டுமொரு கைத்தொழிற் புரட்சியை உருவாக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்களை வரவழைத்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டலாம். இதற்கு ஆரம்பமாக வடக்குக் கிழக்கின் பொருளாதார மேம்பாடு என்ற தொனிப்பொருளில் நாம் ஒரு சர்வதேச மாநாடு ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்துவது காலோசிதமானதென தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தக் கண்காட்சி ஆரம்ப விழாவில் யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்தியாவிற்கான கொன்சியுலர் ஜெனரல் ஏ.நடராஜன், யாழ்ப்பாணம் கைத்தொழில் வர்த்தக சம்மேளனத் தலைவர் கே.விக்னேஸ், யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி ஸ்தாபகத் தலைவர் கோசல விக்ரமநாயக, கண்காட்சிக் கவுன்சில் தலைவர் வினே ஆர்.சர்மா, தேசிய ஏற்றுமதி சம்மேளன பொதுச் செயலாளர் நாயகம் ஷிஹாம் மரைக்கார், லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் பிரைவட் லிமிட்டடின் நிறைவேற்று அதிகாரி ஆசிம் முக்தார் உட்பட இந்தியாவிலிருந்தும் வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர்.

No comments