Breaking News

நாட்டை பிரித்து நோக்காமல் சமமாக அபிவிருத்தி செய்வதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் - யாழில் அமைச்சர் மங்கள சமரவீர

வடக்கு கிழக்கு என்று நாட்டை பிரித்து நோக்காமல் முழு நாட்டையும் சமமாக அபிவிருத்தி செய்வதே சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான அலுவலகம் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


அமைச்சர் மங்கள சமரவீர மேலும் உரையாற்றுகையில்,


நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு வருட பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன் வடக்கிற்கு பத்திற்கு மேற்பட்ட முறை விஜயம் செய்துள்ளார். வடக்கு மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வையும் பெற்றுக்கொடுத்துள்ளார். சமகால அரசாங்கம் பதவிப்பொறுப்பை ஏற்றபின்னரே வடக்கில் சிவில் நிர்வாகம் நிறுத்தப்பட்டுவருகின்றது.


இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை தற்பொழுது உரிய பொதுமக்களிடம் கையளித்துவருகின்றோம். காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கடந்தவருடம் இங்கு நடைபெற்ற நடமாடும்சேவையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சிலர் பிரிவை யாழில் அமைத்துத்தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். அதனை இன்று நாம் நிறைவேற்றியுள்ளோம் என்பதில் பெருமை கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


அரசாங்கம் முன்னைய அரசாங்கத்துடன் போராடியே புதிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்திற்கு ஆதரவான அதிகாரிகள் இதற்கு தடையேற்படுத்துகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.


இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் இன்னும் சிலதினங்களில் இடம்பெறவுள்ளது. நாடு பிரிட்டினிடமிருந்து சுதந்திரமடைந்த போது அப்போதைய ரைம்ஸ் பத்திரிக்கை இலங்கையை ஆசியாவின்; சுவிஸ்லாந்து என வர்ணித்திருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.


சிங்கப்பூரின் அபிவிருத்தி தொடர்பாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இங்கு நாம் இலங்கையிலுள்ள வளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது சிங்கப்பூரிலும் பார்க்க நாம் அதிகளவு வளங்களைக் கொண்டுள்ளோம்.


நாட்டில் யுத்தம் இடம்பெறாமல் இருந்திருந்தால் நாடு சிங்கப்பூராக மாறியிருக்கும். இன மொழி மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தால் நாடு எந்தவித பிரச்சினையுமின்றி வளர்ச்சியடைந்திருக்கும்.


ஆரம்பத்தில் நாட்டில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது விட்டுச்செல்ல அது பூதாகாரமாக உருவெடுத்து யுத்தத்தில் முடிந்தது. யுத்தத்தில் பல பெறுமதி மிக்க உயிர்களை இழந்தோம். யுத்தத்தினால் இறந்தவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தினுடைய பிள்ளைகளே. நாட்டின் இறைமையை பாதுக்காக்க போரிட்ட இருதரப்பினரது உயிர்களும் பெறுமதி வாய்ந்தவையே என்று அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.நிகழ்வில் கலந்துகொண்டு எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் உரையாற்றினார் :2017ம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் எமது அதிகாரங்கள் பகிரப்பட்டு எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஆர் சம்பந்தன் தெரிவித்தார்.


புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் அதிகார பகிர்வு தொடர்பாகவும் கருத்துத்தெரிவித்த அவர் இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டுமென்பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் உறுதியாக உள்ளார். அதற்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றார்.


அரசியல் யாப்பு தொடர்பில் நாட்டில விரிவாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் மாத்திரமன்றி பெரும்பான்மையின மக்களும் இதற்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். பெரும்பாண்மை தலைவர்கள் கூட இதனை வரவேற்றுள்ளனர்.


ஆனால் இந்த வருடத்திற்குள் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படவேண்டும். இதனை தமிழ்மக்கள் விரும்புகின்றனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.


இதில் மக்களின் இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதிகாரங்கள் பகிரப்பட்டு சுயநிர்ணய உரிமைகளை அடையவேண்டும் என்பதில் நாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை இதில் நாம் வலியுறுத்தி வருகின்றோம் என்று தெரிவித்தார்.


எமது இவ்வாறான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். உண்மையான புரிந்துணர்வு ஏற்பட்டால் மாத்திரமே நல்லிணக்கம் ஏற்படும். சமாதானத்தின் மூலமாக சமத்துவதத்தை அடையமுடியும் என்பதில் நாம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை ஆளும் தரப்பினருக்கு எடுத்து கூறியுள்ளோம்.


காணாமல்போனோர் தொடர்பாக கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,


இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று அறியவே பெற்றோரும் மனைவிமாரும் பிள்ளைகளும் விரும்புகின்றனர். இவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? ஏன்பதனை அறியாமல் இவர்கள் தவிர்கின்றனர். இந்த நிலை இனியும் தொடரக்கூடாது எனவே காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலையினை வெளியிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.நிகழ்வில் கலந்துகொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உரையாற்றுகையில் :


இன்று உண்மையிலேயே எமது மக்களுக்கு ஒரு நல்ல நாள். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் வடக்கு மக்களை நெருக்கமடையச் செய்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர். எனவே இவர்களை மீள அழைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன் என்று குறிப்பிட்டார்.


கொழும்பிலுள்ள தலைமையலுவலகத்தில் இதுவரை மேற்கொண்ட பொரும்பாலானவற்றை யாழ் அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.


எங்கள் திறன் அபிவிருத்தி, முதலீட்டு முன்னேற்ற ஆக்க முயற்சி, கலாச்சார பரிமாறல் போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் . எல்லோருமே நாட்டோடு இசைந்து இவற்றைச் செய்யத் தயாராக உள்ளார்கள் . ஆனால் அரசும் அதிகாரிகளும் வெளி நாட்டு இலங்கையர் மீது கொண்டுள்ள சில கருத்துக்கள் இவர்களை இலங்கை வராது தடுக்கின்றன . தெரிவு செய்யப்பட்ட தடை நீக்கங்களைக் கொண்டுவராமல் எல்லா அமைப்புகளின் தடையையும் நீக்கி இங்கு வரும் ஒவ்வொரு நபரையும் நன்கு விசாரணை செய்யுங்கள் என்று நான் பரிந்துரைக்கிறேன்.


நான் கனடா சென்றிருந்தவேளை அங்குள்ள இலங்கை மக்கள் என்னை சந்தித்தனர். எங்கள் திறன் அபிவிருத்தி முதலீடு முன்னேற்ற ஆக்க முயற்சி கலாச்சார பரிமாற்றம் போன்றவற்றில் ஆர்வமாக உள்ளனர்.


எமது நலனுக்காக இவர்களுக்கு இரட்டைபிரஜாவுரிமை வழங்கி இவர்களின் திறமைகளை பயன்படுத்தி பணச்சிக்கல்களில் இருக்கும் அரசாங்கத்திற்கு இவர்களின் பணம் கிடைக்கக்கூடிய வகையில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments