Breaking News
recent

12 ஆண்டுகளின் பின்னர் தொடரை வென்றது இலங்கை - ரசிகர்கள் மகிழ்ச்சி


இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி தற்போது நிறைவிற்கு வந்துள்ளது, இந்த போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 12 ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.


இந்த போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


அணி சார்பில் தனஞ்சய டி சில்வா (60), தனுஷ்க குணதிலக (57), திமுத் கருணாரத்னே (53), அகில தனஞ்சய (43*), ரங்கன ஹேரத் (35), ரொஷென் சில்வா (22), குசல் மென்டிஸ் (22) ஓட்டங்களை பெற்றனர்.
தென்னாபிரிக்க அணி சார்பில் கேசவ் மஹாராஜ் மிக சிறப்பாக (8) விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
அணி சார்பில் பப்டு ப்ளஸிஸ் (48), குயின்ரன் டி கொக் (32), ஹசிம் அம்லா (19) ஓட்டங்களை பெற்றனர்.

இலங்கை அணியில் அகில தனஞ்சய (5), டில்ருவான் பெரேரா (4) மற்றும் ரங்கன ஹேரத் (1) விக்கெட்டுக்களை வீ்ழ்த்தினர். இதனையடுத்து 214 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அணி சார்பில் திமுத் கருணாரத்ன (85), அஞ்சலோ மத்தியூஸ் (71), தனுஷ்க குணதிலக (61), ரொஷென் சில்வா (32*) ஓட்டங்களை பெற்றனர்.
தென்னாபிரிக்கா சார்பில் கேசவ் மஹாராஜ் (3) விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

489 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி நேற்றைய ஆட்டநாள் நிறைவில் 41 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்று தொடர்ந்து ஆடி 86.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை மட்டும் பெற்று 199 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

அணி சார்பில் தெயுனிஸ் டி ப்ரின் (101),
தெம்பா பவுமா (63), டியன் எல்கர் (37) ஓட்டங்களை பெற்றனர்.
இலங்கை அணியில் ரங்கன ஹேரத் 98 ஓட்டங்களுக்கு (6), அகில தனஞ்சய 67 ஓட்டங்களுக்கு (2), டில்ருவான் பெரேரா 90 ஓட்டங்களுக்கு (2) விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

2006 ஆம் ஆண்டு மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் இன்று மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சுரங்க லக்மால் தலைமயிலான இலங்கை அணியும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதித்திருக்கிறது. இந்த 12 ஆண்டு இடைவெளிக்குள் திலகர்தன டில்ஷான் தலைமயில் (1) மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் (2) உட்பட 3 டெஸ்ட் தொடர்களை இலங்கை அணி இழந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.