Breaking News
recent

ஆட்சியாளர்களின் நில அபகரிப்பு சிந்தை மாற வேண்டும் : ரவிகரன்


(- ஞா.பிரகாஸ்)
ஆட்சியாளர்களின் அபகரிப்பு சிந்தை மாறி, நியாயமான நிலையில் ஆட்சி செய்யுங்கள் தமிழர்களை ஒதுக்கி விடும் நிலையை உங்களின் மனங்களிலிருந்து ஒதுக்கி விடுங்கள் என்று வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற வட மாகாண சபை அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார், 

மேலும அவர் தெரிவிக்கையில், 

2017.01.24 ஆம்  திகதி நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜெயவிக்ரம் பெரேரா அவர்களினால் நந்திக்கடல் மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதிகளிலுமாக 4141.67 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் நாயாறு மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதிகளிலுமாக 4464.35 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் 469ம் அத்தியாயமான தாவர விலங்கினப்பாதுகாப்புக் கட்டளைச்சட்டம் 2ம் பிரிவின் 01ம் உட்பிரிவின் கீழான கட்டளை என்ற தலைப்பினுள் வர்த்தமானி மூலம் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம், நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி மொத்தம் 8606.02 ஹெக்டயர்கள்’ இதற்குள் அடங்குகின்றன. 

இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 9000 குடும்பங்களுக்கு மேல் தமது வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் தீர்க்கக்கூடிய வகையில் இந்நீர் நிலைகளை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். 

பண்டைய காலந்தொட்டு ஒரு செழிப்பான இடமாகவும், மக்கள் இறால், மீன்கள் என வீச்சுவலைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட விடுவலைகள் மூலமாகவும் தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தை காக்கும் இடமாகக் காணப்படுகின்றது. இது தவிர இதனைச் சூழவுள்ள வயல் நிலங்கள் கூட இதனுள் அடங்குவதை அறிவிக்கப்பட்டுள்ள வரைபடம் காட்டி நிற்கின்றது முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல், மட்டுமல்லாமல் வற்றாப்பளை அருகாக அமைந்துள்ள வயல் நிலங்களும் இதற்குள் அடங்குவதனை அறிய முடிகிறது. இதே போல் நாயாற்றுப்பகுதி அநேகமாக இலங்கையிலேயே தூண்டில் தொழிலுக்கு பெயர் போன இடமாகும் அத்தோடு நந்திக்கடல் பற்றிக்குறிப்பிட்ட அதே தொழில் வாய்ப்புக்கள் உள்ள மிக நீண்ட நீர்ப்பரப்புடனான இடமாகும். இங்கும் வயல் நிலங்கள் சிறு பயிர் செய்கைக்கான இடங்களையும் உள்ளடக்கியே தமது கட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள். முல்லைத்தீவு சகல வளங்களுமுள்ள ஒரு இடமாகும். இங்கு பல வடிவங்களில் அரசாங்கம் நில அபகரிப்புக்களை செய்து வருகின்றது. 

01.மணலாறு குடியேற்றம் 
02.மகாவலி எல் போர்வையில் மாயாபுர குடியேற்றம் 
03.இராணுவ கடற்படை விமானப்படை மூலமான அபகரிப்பு 
04.சட்ட விரோத மீனவர்கள் மூலமாக அபகரிப்பு குடியேற்றம். 
05.புத்த பிக்குகளினூடாக மதத்திணிப்பை மையப்படுத்தி விகாரைகள் அமைப்பது மூலமான செயல்கள் 
06.தொல் பொருள் திணைக்களத்தின் காணிப்பறிப்புகள், அதனூடாகவும் விகாரைகள் அமைப்பு. 
07.வனத்துறையினர் மூலமான அபகரிப்பு 
08.வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலமானது.

 எனது கணிப்பின்படி முல்லைத்தீவில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் நிலங்கள், நீர்நிலைகள் என அபகரிக்கப்பட்டுள்ளது. என அறியத்தருகின்றேன். இதுமக்கள் வாழும் இடமென்ற நிலைமாறி திட்டமிட்டு தமிழ் மக்களை வெளியேற்றுமிடமாக மாறி வருகின்றது. 

ஆட்சியாளர்களின் அபகரிப்பு சிந்தை மாறி, நியாயமான நிலையில் ஆட்சி செய்யுங்கள் தமிழர்களை ஒதுக்கி விடும் நிலையை உங்களின் மனங்களிலிருந்து ஒதுக்கி விடுங்கள். இப்படியான திணிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை பின்னாளில் ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறுகின்றேன். 

ஜனநாயக நீரோட்டத்தில் எமது மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. உரிய இடங்களுக்கு இவற்றை கொண்டு சென்று தீர்வு பெற்றுத்தாருங்கள் என இச்சபையிலே எனது மக்களின் சார்பாளனாக கௌரவ முதலமைச்சர் கௌரவ அவைத்தலைவர் கௌரவ அமைச்சர்கள் கௌரவ உறுப்பினர்கள் அனைவரிடமும் வேண்டி நிற்கின்றேன். என்றார். 


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.