Breaking News
recent

காட்டுப்புலம் மாணவியைக் கொன்றோருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் .



சுழிபுரம் - காட்டுப்புலம் மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவைப் படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். அத்துடன், தமிழர் தாயகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கு முறையான பொறிமுறை தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்படவேண்டும் என தமிழர் சம உரிமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

றெஜினாவின் படுகொலையைக் கண்டித்து தமிழர் சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தா.நிகேதன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் படுகொலையானது மாணவிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாகியுள்ளது. பச்சிளம் குழந்தையை பாதகச் செயலுக்கு உட்படுத்தியவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவைப் படுகொலை செய்தவர்களும் போதையில் இருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஆக, போதைப் பொருள் பாவனையே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கின்றது.

யாழ். குடாநாடு உட்பட தமிழர் தாயகத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்கின்றது. கிராமங்களில் உள்ள இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கல்வியறிவில் பின்தங்கிய பிரதேசங்களில் போதைப்பொருள் வேகமாக ஊடுருவுகின்றது.

தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகளைச் சிதைத்துச் சீரழிப்பதன் மூலம் தமிழர்களை அடிமைப்படுத்தலாம் என்ற நீண்டகாலச் சிந்தனையின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு போன்றவற்றைத் தடுப்பதற்கான பொறிமுறைகள் இருந்தும் பொலிஸார் அதை முறையாகச் செயற்படுத்தவில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட இதைத் தட்டிக்கேட்காமல் இருக்கின்றனர்.

எனவே, தமிழர் தாயகத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலமே வித்தியா, றெஜினா போன்று இனிமேலும் படுகொலைகள் தொடராமல் தடுக்கலாம்.

எமது எதிர்காலச் சந்ததியின் நிம்மதியான வாழ்க்கைக்காக கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரண்டு குரல்கொடுக்குமாறு தமிழர் சம உரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. அரசியல்வாதிகளுடன் அரச அதிகாரிகள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.