Breaking News
recent

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமெரிக்கா ஒருபோதும் நீதியை பெற்றுக்கொடுக்க போவதில்லை!



போரினால் பல்லாயிரக் கணக்கான உறவுகளை பறிகொடுத்து மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு முகம்கொடுத்த தமிழ் மக்களுக்கு அமெரிக்கா ஒருபோதும் நீதியை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்று மனித உரிமை செயற்பாட்டாளரும், இலங்கையிலுள்ள மிகப்பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலீன் தெரிவிக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உதவுவதாக அறிவித்துள்ளமை சிறிலங்கா அரசை தொடர்ந்தும் சர்வதேச அரங்கில் இருந்து காப்பாற்றுவதற்கான நாடகம் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலீன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து யூன் 19 ஆம் அமெரிக்கா வெளியேறுவது குறித்த அறிவித்தலை அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் நிக்கி ஹாலே, வொஷிங்டனில் வைத்து அறிவித்தார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக்கல் பம்பேயோவுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் நிக்கி ஹாலே கடுமையாக சாடியிருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களுக்குள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப், சிறிலங்கா அரசின் முக்கிய தலைவர்கள் சிலரை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா வெளியேறினாலும், சிறிலங்காவிற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அமெரிக்கா பெற்றுக்கொடுக்கும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலீன், பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால் சிறிலங்காவிற்கு பாரிய நன்மைகள் கிட்டவுள்ளதாக மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.

“ அமெரிக்கா விலகியதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அதன் முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையையும் இழந்திருக்கின்றது. நாமும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துவரும் அதிரடித் தீர்மானங்களை பார்த்து அவதானித்து நாட்டிற்காக முக்கியமான தீர்மானங்களை நாமும் எடுக்க வேண்டும். சர்வதேசம் குறித்து இரண்டாம் பட்சமாகவே சிந்திக்க வேண்டும். உண்மையில் எமது ஜனாதிபதியினதும் பிரதமரினதும் வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாக உலக நாடுகளுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிவருவதால் இன்று மின்சாரக் கதிரை என்ற பேச்சிற்கே இடமில்லாது போயுள்ளது. படையினரை எவரும் தண்டிக்கவும் முன்வருவதில்லை. சர்வதேச நீதிமன்றம், கலப்பு நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகள் என்பது கடந்தகாலங்களில் பேசப்பட்ட விடையங்கள். இன்று அவை குறித்த பேச்சே இல்லை. நாட்டில் முன் இருந்த இந்த பாரிய சவால்கள் அனைத்தையும் எமது ஜனாதிபதியும் – பிரதமரும் இணைந்து சூக்குநூறாக தகர்தெறிந்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியதால் சிறிலங்காவிற்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று யாராவது கூறுவார்களானால் அது உண்மையில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா விலகியதால் சிறிலங்காவிற்கு பாரிய நன்மைகள் கிட்டவுள்ளது என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.