Breaking News
recent

விடுதலைப் புலிகளின் பலத்தை இழந்து நிற்கின்றோம்! மாவை சேனாதிராஜா -மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல்!

தமிழர்களுடைய ஜனநாயக போராட்ட வரலாற்றில் மிகவும் உச்சமான பலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் இருந்தது. அந்த பலத்தின் ஒரு பகுதியினை தற்போது இழந்து நிற்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் இன்று நற்பிட்டிமுனையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,இன்றைய காலக்கட்டத்தில் மூன்று கட்சிகள் ஒணைந்து ஒரு பலமான ஜனநாயகக்கட்சியாக மக்கள் முன் தேர்தலில் குதித்திருக்கின்றது. இதனை அனைத்து தமிழ் மக்களும் நன்குணர்ந்து செயற்படவேண்டும்.

நாட்டிலே நடைபெற்ற எந்தப்போராட்டங்களாக இருந்தாலும் சரி எமது தமிழ் மக்கள் இழந்த இழப்புக்கள் என்பதனை சொல்லினால் அடக்க முடியாது.

த.தே.கூட்டமைப்பானது ஜனநாயக மக்கள் கட்சியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக்கட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் எதிர்கால சந்ததியினராகிய இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு எமது கூட்டமைப்பானது இம்முறை முன்னாள் போராளிகளையும் தேர்தல் களத்தில் களமிறக்கியிருக்கின்றது.

த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக பல விதமான விமர்சனங்களை மாற்றுக்கட்சியினர் சுமத்துவதனை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. த.தே.கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக எமது மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பலமாக இருந்த காலத்தில் ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடன் 2002இல் போர் நிறுத்தம் ஒன்றினை செய்திருந்தார்கள். அந்த போர் நிறுத்தமானது சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின்கீழ் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒஸ்லோவில் நோர்வே நாட்டு பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.

அந்த காலக்கட்டத்தில் எமது கட்சியின் தலைமை பகிரங்கமாகவே அறிக்கைவிட்டிருந்தது. அதாவது இங்கு நடைபெறும் பேச்சு வார்த்தை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தான் பேச வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறியிருந்தோம். அவ்வாறுதான் எமது நிலைப்பாடு அமைந்திருந்தது.கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வந்த ஆயுத போராட்டமானது, 2009 மே.18 அன்று ஒரு எல்லையை அடைந்தது அதன்பிற்பாடு தமிழ் மக்களுடைய உச்ச பலம் வழுவிழந்து காணப்பட்டது. அவ்வாறு இருந்தபோதும் எமது மக்கள் தங்களது பலத்தினை தேர்தல் காலங்களில் வாக்குப்பலம் மூலம் நிரூபித்து வெற்றியும் கண்டிருக்கின்றார்கள்.

ஆயுத போராட்டம் நடைபெற்ற காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களது உடமைகளும் அழிந்து நாசமாகின. அவை அனைத்தையும் மக்கள் இழந்தபோதும் அவர்களது உரிமையை தங்களிடம் உள்ள வாக்குப்பலம் மூலம் நிரூபித்திருந்தார்கள்.இதே போன்றுதான் ஆயுதபோராட்டம் முடிவுற்றதன் பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் த.தே.கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதனை நிரூபிக்க தவறவில்லை.


அவ்வாறு நிரூபித்ததன் காரணமாகத்தான் த.தே.கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்று சம்பந்தன் தலைமையிலான குழுவினை அமெரிக்கா அழைத்து தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டது. தற்போது எம்மிடையே உள்ள மாற்றுக்கட்சிகள் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.அந்த வகையிலேதான் சில பத்திரிகைகளும் ஒற்றையாட்சி தொடர்பான கருத்துக்களை முன்வைத்து வருகின்றது.எமது கட்சியானது ஒருமித்த நாட்டிற்குள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகின்றது என்பதனை தெளிவற்றவர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம் எனவும் கூறினார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.