Breaking News
recent

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் அடியாட்களால் பெண் வேட்பாளருக்கு அச்சுறுத்தல்?

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிடச் சென்ற பாரதிபுரம் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக புளொட் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாக்கியநாத் மஞ்சுளா என்ற பெண் வேட்பாளர் புதுக்குடியிருப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகனின் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார்.

அதன்போது அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் நண்பகல் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அவரைக் காண முடியவில்லையென்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் நியூஸ்பெஸ்ட் நேற்று வினவியபோது, அப்பெண்ணை தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

எனினும், நேற்று மாலை 6 மணியளவில் அவர் மீண்டும் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் அடியாட்கள் தன்னை மிரட்டியதாகவும் அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் அவர் இன்று காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, அப்பெண் தனது முறைப்பாடு தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் அவசியமில்லை என குறிப்பிட்டதால், கைது செய்யப்பட்டுள்ளவரை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனிடம் இது குறித்து வினவப்பட்டது.

அவை ஒட்டுமொத்தமாக பொய்யான விடயங்கள் எனவும் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஆசை எல்லோருக்கும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.