Breaking News
recent

வித்தியா படுகொலை: சாட்சியாளருக்கு சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்த வழக்கின் தீர்ப்பு விரைவில்

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சாட்சியாளரான பொலிஸ் உத்தியோகத்தர் கோபி கிருஷ்ணாவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இந்த வழக்கின் பிரதிவாதியான பூபாலசிங்கம் இந்திரகுமார் இன்று நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவர் வித்தியா படுகொலை வழக்கிலிருந்து மூவரடங்கிய நீதிபதிகளால் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் பூபாலசிங்கம் இந்திரகுமார் குறித்த வழக்கில் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது ஆஜரான தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் தர்மதாஸ, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை தனது உயர் அதிகாரிக்கு அனுப்பி முடிவைக் கோரியதாகவும் அதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என அவர் பதிலளித்ததால் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமதம் நிலவுவதாகவும் கூறியுள்ளார்.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் Trial at Bar நீதிமன்றத்தில் ஒரு சாட்சியாளராகக் குறிப்பிடப்படவில்லை என்பதால் சாட்சியை அச்சுறுத்திய வழக்காக இந்த வழக்கைத் தொடர முடியாதுள்ளதாக நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பிரகாரம் அடுத்த தவணையின்போது இது தொடர்பிலான கட்டளை பிறப்பிக்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்
இந்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.