Breaking News
recent

விடுதலைப் புலிகளின் காலத்தில் இல்லாத போதை யாழில் பரவிவருகிறது.....எப்படி...?

ஈழ விடுதலை யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும், வடக்கில் ஒரு வித அச்ச உணர்வு காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம் என்று சொன்னதும் அன்று கலாச்சாரம், பண்பாடுதான் எம் கண்முன் வரும். இன்று கடத்தல், வாள் வெட்டு என்று கண் முன்னே திரையிட்டு செல்கின்றது.

புலிகளின் துப்பாக்கிகளுக்கு பயந்து அடங்கியிருந்த யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வடக்கிற்கான பொருளாதார தடைகள் ஏற்பட்ட போது இந்தியாவில் இருந்தே பெருமளவான பொருட்கள் கடல் வழியாக கொண்டு வரப்பட்டன.அந்த காலப்பகுதியில் கூட வடக்கிற்கு போதைப்பொருளான கஞ்சா கொண்டுவரப்படவில்லை. அதனைப் பயன்படுத்துபவர்களும் சொல்லக் கூடிய வகையில் வடக்கில் இருக்கவில்லை.அப்படி இருந்த தமிழ் சமூகம் இன்று என்ன நிலையில் நிற்கின்றது என்ற கேள்வி எழுகிறது. தமிழ் மக்களின் கலாச்சார பூமியாக கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்திலும் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் நாளாந்தம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்படுவது சாதாரணமாகி விட்டது.

வடபகுதியில் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய கடற் பகுதிகளூடாக கேரளா கஞ்சா வந்து சேருகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட து. ஆயுத போராட்டத்தை விட கெடூரமான ஒன்றாக போதை பொருள் பாவனை உருவெடுத்துள்ளது. இது தான் வாள் வெட்டு என்ற கலாசாரத்திற்கும் ஆரம்ப புள்ளியாக அமைந்துள்ளது.

இலங்கையில் வடக்கைப் பொறுத்தவரை ஏனைய மாகாணங்களை விட பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, முழத்திற்கு முழம் பொலிஸ், புலனாய்வுப்பிரிவு என வடபகுதியில் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் நிலை கொண்டுள்ள போதும் கேரளா கஞ்சாவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.பொலிஸாரால் அவ்வப் போது கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டாலும் நாளாந்தம் அது இந்தியாவில் இருந்து வந்து கொண்டே இருக்கிறது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்கின்றது. அதனுடன் தொடர்புடைய பெரிய வலைப்பின்னல் நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பதிவுகள் இல்லை. ஆக, பொலிஸ் விசாரணைகள் கூட கஞ்சா கடத்தலை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் வடக்கில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் உள்ளது. இதுவும் பல்வேறு சந்தேகங்களையும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

வடபகுதியில் இடம்பெறுகின்ற பல வன்முறைகளுக்கும், விரும்பத் தகாத செயற்பாடுகளுக்கும் கேரளா கஞ்சாவின் பாவனையும் ஒரு காரணம் என்பதை எவரும் மறுத்து விடமுடியாது.ஒவ்வொரு கிராமமும் அங்குள்ள கிராம மட்ட அமைப்புக்களும் தமது கிராமம் தொடர்பில் விழிப்படைய வேண்டும். போதை மூலம் ஒரு சமூகம் அழியும் நிலையும் நாளை வரலாம். எதற்காக இப்படி நடக்கிறது என்ற கேள்விகள் துளைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்காக அநாவசியக் கைதுகள் இடம்பெறாமல் இருப்பதிலும் பொலிஸார் அதீத அக்கறை காட்டுவது அவசியம்.நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று, ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டாலும் ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக் கூடாது என்பதுதான். இந்த அடிப்படை நீதியையும் மாற்றி, குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளவும் கூடாது நிரபராதிகள் தண்டிக்கப்பட்டும் விடக்கூடாது என இன்னும் துலக்கிக் கொள்ளலாம். உண்மையான குற்றவாளிகள் பிடிபடும் போதுதான் தமிழர் மீண்டும் தலைதூக்க முடியும்... 

தமிழனுக்கு என்று தனி நாடுதான் இல்லை. ஆனால், தனித்துவம் உண்டு, அதை காக்க வேண்டிய கடப்பாடு தனி மனிதன் ஒவ்வொருவருக்கும் உண்டு.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.