Breaking News
recent

ஈ சுவாபிமானி தங்க விருது ஜனாதிபதியிடம் கையளிப்பு

மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவித்து தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'ஜனாதிபதியிடம் தெரிவிக்க' நிகழ்ச்சித்திட்டத்திற்கு அண்மையில் கிடைக்கப்பெற்ற 'ஈ சுவாபிமானி' தங்க விருது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்; கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தில் தொலை தொடர்பு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் வசந்த தேசப் பிரியவினால் இவ்விருது ஜனாதிபதியிடம் நேற்று வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பத்தை மக்கள் சேவைக்காக உச்ச அளவில் பயன்படுத்தியதை பாராட்டி இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தினால் 'ஜனாதிபதியிடம் தெரிவிக்க' நிகழ்ச்சித்திட்டத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

'ஜனாதிபதியிடம் தெரிவிக்க' நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அரச சேவை வழங்கல் செயல்முறையை பலப்படுத்தி மக்களின் பிரச்சினைகள், மனக்குறைகள் மற்றும் கருத்துக்கள், முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதுடன், அவற்றுக்கு துரிதமாகவும் பயனுறுதிமிக்க வகையிலும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் வசதியளிப்பது இதன் நோக்கமாகும்.

பொது மக்களுக்கு 1919 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அரச தகவல் மையத்துடன் தொடர்பு கொண்டு அல்லது இணையத்தளம், மின்னஞ்சல், தபால் ஆகிய வழிகளினூடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு தமது முறைப்பாடுகள், மனக்குறைகள் அல்லது கருத்துக்களை முன் வைப்பதற்கான சந்தர்ப்பம் 'ஜனாதிபதியிடம் தெரிவிக்க' நிகழச்சித்திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவினால் பரீட்சிக்கப்பட்டு அம்முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த அமைச்சுகள் அல்லது நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேற்படி அனைத்து நடவடிக்கைகளும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கணனி தரவு முறைமையினூடாக வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

'ஜனாதிபதியிடம் தெரிவிக்க' நிகழ்ச்சித்திட்டத்திற்கு தற்போது 164,504 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் தீர்க்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் 62,351 ஆகும். தீர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 59,351 ஆகும்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப்பெரும, சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்க, ஸ்ரீ லங்கா மொபிட்டல் நிறுவனத்தின் சிரேஷ்ட பொது முகாமையாளர் சமன் பெரேரா, பொது முகாமையாளர் பிரபாத் கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.