Breaking News
recent

உறவுகளின் கண்ணீர் நாட்டை நிம்மதியாக இருக்க விடாது! சிறிதரன் காட்டம்

உறவினர்களைப் படையினரிடம் ஒப்படைத்தவர்கள் இன்று சாலைகளில் – தகரக் கொட்டில்களில் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் கண்ணீர் சிந்தி தமது உயிரையும் மாய்க்கும் அவலம் இன்று இடம்பெறுகின்றது.


அவர்களுடைய கண்ணீர் இந்த நாட்டை நிம்மதியாக இருக்க விடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் கடந்த 6ஆம் திகதி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

கிளிநொச்சி, ஆனந்தபுரத்தைச் சோ்ந்த துரைசிங்கம் ஈஸ்வரி என்பவருடைய மகன் காணாமற்போயிருந்தார். மகனை மீட்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்தத் தாய் கடந்த ஜூன்23 ஆம் திகதியன்று இறந்து விட்டார்.இதைவிட கிளிநொச்சி, உதயநகரைச் சோ்ந்த உருத்திராதேவி ஈஸ்வரன் என்பவரும் கடந்த 31.ஓகஸ்ட் அன்று காலமாகி விட்டார்.

இதேபோல தனது மாமாவுக்காகப் போராடிய அடைக்கலம் கீர்த்திகா என்ற பதினாறு வயது மாணவி இறந்திருக்கிறார். திருவையாறைச் சோ்ந்த மகேந்திரராஜா என்பவரும் போராடி முடிவேதுமின்றி இறந்திருக்கிறார்.

இப்படியாக கடந்த 200 நாட்களுக்குள் 4போ் அந்தப் பந்தலுக்குள் இறந்திருக்கிறார்கள். பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார் ஒவ்வொருவராக இறந்து கொண்டிருக்கிறார்கள்.தயவுசெய்து இதனைக் கவனத்தில் எடுங்கள். பிள்ளைகளை ஒப்படைத்தவர்கள் இன்று தகரக் கொட்டில்களுக்குள் இருந்து மாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கண்ணீர் இந்த நாட்டை நிம்மதியாக இருக்க விடாது.

அவர்களுடைய கண்ணீருக்கு யார் பதில் சொல்வது? இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். முதலில் இந்த நாட்டிலே நீதியை வழங்குவதற்கு எல்லோரும் சிந்தியுங்கள். அப்படிச் சிந்திக்கின்ற போது தான் விடிவு சரியானதாக அமையும்.போர் மிக மோசமாக நடைபெற்ற போது இடம்பெயர்ந்த 4 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் ஒரு குறுகிய நிலப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்டார்கள். பதிவுகளின் பிரகாரம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 426 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைப்பது போல செய்திகளைப் பரப்ப முனைகின்றனர். இது உண்மைக்குப் புறம்பான நிலை.உலகம் பூராவும் இருக்கின்ற தமிழர்கள், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ப தற்காக குரலெழுப்பி வருகின்றார்கள்.


ஆனந்தபுரத்திலும், புதுக்குடியிருப்பி லும், ஒட்டுசுட்டானிலும், உடையார்கட்டிலும், சுதந்திரபுரத்திலும், முள்ளி வாய்க்காலிலும் தமிழர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதற்கு உலகமே சாட்சிகளை வைத்திருக்கின்றது.

அங்கு 4,20,000 மக்கள் இவ்வாறு அடை பட்டிருந்த போது, மகிந்த அரசு வெறும் 70 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் உணவுப் பொருட்களை அனுப்பியது.அங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம், மனித உரிமை அமைப்புகளின் அலுவலகங்கள் எல்லாம் பலாத்காரமாக மூடப்பட்டன. அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். மக்களையெல்லாம் தவிக்க விட்டு அவை வெளியேறியிருந்தன.

இவை 21ஆம் நூற்றாண்டில் உலகத்திலே இந்த மண்ணில் நடந்த மிகப்பெரிய மனிதப் பேரவலத்தினுடைய சாட்சிகள்.அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள், சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை. எனவே, இதனை வேறு திசைகளுக்குக் கொண்டு செல்லாதீர்கள்.உண்மைகளைக் கண்டறிதல், நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் அடிப்படையில் அவர்களுக்கான தீர்வை வழங்குவதற்கு அரசு சம்மதத்தை வழங்கியிருந்தது.

ஆனால், இப்போது இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இன்றுவரை அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூட, ‘எந்தவோர் இராணுவத் தளபதியையும் நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்’ என்று தன் மக்களுக்காகப் பேசியிருக்கின்றார். அவருடைய அந்தப் பேச்சு அவருடைய இன மக்களுக்குரியது.ஆனால், இந்த நாட்டிலே இன்னொரு இன மக்களும் அவருடைய தலைமையின் கீழே இருக்கின்றார்கள். அவர்கள் பிரிவினைக்கு அப்பால், இந்த நாட்டிலே ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வைக் கேட்டிருக்கின்றார்களே.

அவர்களுக்கான செய்தி என்ன என்பதை ஏன் அவரால் சொல்ல முடியவில்லை?

இந்த நாட்டிலே இன்னும் இனவாதத்தினுடைய அடி வேர்கள் அறுக்கப்படவில்லை; அதன் ஆணி வேர் மிக ஆழமாகவே சென்று கொண்டிருக்கின்றது.தமிழ்ப் பிரதேசங்களில் எங்கு பார்த்தாலும் குடியேற்றங்களுடன் சிங்கள ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றார்கள்.தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இதய சுத்தியுடனான விடயங்களை முன்னெடுப்பதற்கு அரசு திராணியற்று நிற்பதையே காண முடிகின்றது.

பிரபாகரன் காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் கஞ்சாவை யாராவது கண்டிருப்பார்களா?

மக்கள் இரவிலே தெருக்களிலே திரிவதற்குப் பயந்தார்களா?

பட்டதாரிகள் உண்ணாவிரதமிருந்தார்களா?

வாள்வெட்டுக் கலாசாரம் இருந்ததா?

வேலையில்லாத இளைஞர்கள் இருந்தார்களா?

அந்தக் காலத்திலே எல்லாவற்றுக்குமே அவர்களிடம் ஒரு தீர்வுத் திட்டம் இருந்தது; ஒரு தூரநோக்குப் பார்வையிருந்தது.இங்கே இருக்கின்ற சில அமைச்சர்கள்கூட அந்தக் காலத்திலே அவருடைய நிர்வாகத்தைப் புகழ்ந்திருக்கின்றார்கள் என்றார்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.