Breaking News
recent

வித்தியா படுகொலை: விஜயகலாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு



சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவர் தப்பிச்செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் காரணத்தின் அடிப்படையில், இராஜாங்க அமைச்சரிடம் நேற்று (09) மாலை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபரான சுவிஸ் குமாரை மக்கள் கட்டிவைத்திருந்தபோது, அந்த இடத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சென்று பார்வையிடும் காணொளி அடங்கிய இறுவெட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட காணொளி தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். ரியால் விடுத்த உத்தரவின் பிரகாரம், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இராஜாங்க அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.