Breaking News
recent

வடக்கை காவல்த்துறையினர் பார்த்துக்கொள்வார்கள்! தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை: மகிந்தவிற்கு பதிலடி

வடமாகாணத்தில் நடக்கும் சில அசம்பாவிதங்களினால் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் சில காலமாக நடந்துவரும் வன்முறைச் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பிற்கு இது பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.

இராணுவத்தினரை இராணுவ முகாம்களுக்குள் இன்றைய அரசாங்கம் அடைத்து வைத்திருப்பதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துவருதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தென்னிலங்கை ஊடகங்களும் நேற்று முந்தினம் யாழ். நல்லூரில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தினை பிரதான செய்திகளாக்கி வெளியிட்டிருந்தன.

இச்சம்பவம் பெரும் பரபரப்பாக தெற்கில் பேசப்பட்டது. இதனால் மகிந்த ராஜபக்ச தவிர அரசியல் கடும்போக்காளர்களும் இதனை பெரிது படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து இன்றைய தினம் கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது கருத்து வெளியிட்ட பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்,

வட மாகாணத்தில் நடந்துவரும் வன்முறைகளில் தொடர்புபட்டவர்களை கைது செய்வதற்கு காவல்த்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

அந்த சம்பவங்களுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. இந்தப் பிரச்சினையை வைத்துக்கொண்டு சிலர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கருத்துவெளியிடுகின்றார்கள்.

அவற்றில் உண்மையில்லை. வடக்கு என்றாலும், தெற்கு என்றாலும் எவரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கப்படாது. எமது புலானய்வுப் பிரிவு வலுவிழந்துவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

அதில் உண்மை எதுவும் இல்லை. நாட்டின் சட்டத்தை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

வடமாகாணத்தில் தொடர்ந்துவரும் வன்முறைகள் யாழ்ப்பாணத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பதனை மக்களின் செயற்பாடுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

எனினும், இந்த நிலையினை தெற்கில் பூதாகாரமாக காட்டி வலுவிழந்துள்ள தங்கள் அரசியல் செல்வாக்கை மீள்கட்டியெழுப்ப சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.