Breaking News
recent

யாழ். மாணவன் அடித்துக்கொலை - பல குழப்பங்களுடனான வழக்கு இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில்..



யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் தனுஷன் அமலன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்ற நிதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

எதிர்பாராத பல திருப்பங்களை கொண்ட இந்த வழக்கு விசாரணைகள் நேற்று இடம்பெற்றது. இதில் குறித்த வழக்கின் விசாரணைகளை இன்றைய தினம் வரை ஒத்திவைத்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதியன்று, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பொன் அணிகள் கிரிக்கட் போட்டியின் போது ஜெயரட்ணம் தனுஷன் அமலன் சிலரால் அடித்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலை சம்பவத்தில் யாழ் கல்லூரி மாணவர்கள் ஆறுபேரை கைது செய்து இது குறித்த விசாரைணைகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. பின்னர் சட்டமா அதிபர் குறித்த வழக்கை யாழ். மேல் நீதிமன்றிற்கு பாரப்படுத்தினார்.

இந்த வழக்கில், சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன், நாகராஜா காந்தரூபன் மற்றும் சுந்தரலிங்கம் பிரகாஷ் ஆகிய 6 பேரே கைது செய்யப்பட்ட மாணவர்களாவர்.

நேற்று விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கின் மூன்றாவது சாட்சியாளர் இது குறித்து சாட்சியை பதிவு செய்தார்.

“வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற பொன் அணிகள் கிரிக்கட் போட்டி, 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது.

இதில் நாங்கள் மைதானத்தில் இருந்தோம். அப்போது மைதானத்தில் ஆடிக்கொண்டு இருந்த சிலர், எம்மை நோக்கி தாக்குவதற்காக ஓடிவந்தனர்.

இதை கண்ட நான், ஓடினேன். நான் ஓடிக்கொண்டே திரும்பி பார்க்கும் போது, என்னுடைய நண்பனான ஜெயரட்ணம் தனுஷன் அமலனை அவர்கள் சூழ்ந்துகொண்டு இரும்பு கம்பிகள் மற்றும் கொட்டன்கள் கொண்டு தாக்கினார்கள்.

இதை கண்ட நான், திரும்பி ஓடி வந்த போது, நண்பன் அமலன் நினைவற்று கிடந்தான்.

அவ்வீதியால் சென்ற காரை மறித்து, அமலனை அதில் ஏற்றிக்கொண்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். ஆனால், அங்கு அவன் உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் கூறினர்” என்று குறித்த சாட்சியாளர் தெரிவித்தார்.

சாட்சியமளித்த செல்வரட்ணம் அன்டனி பிரகாஸின் சாட்சியம் முன்னுக்கு பின் முரணாக காணப்படுகின்றது எனவும், இதற்கு முன்னர் இவர் வழங்கிய 4 வாக்கு மூலத்தின் பிரதியை பெற்றுத்தந்தால், சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்ய ஏதுவாக இருக்கும் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நாளை நடைபெறும் என நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

பல குழப்பங்களுடனான குறித்த வழக்கு இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.