Breaking News
recent

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து  வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை.

2016 இல்  கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து  வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன்  பெற்று  தரம் ஆறுக்கு பெரிய பாடசாலைக்கு செல்ல போகும் அவாவுடன்  பாடசாலை செல்வதற்கான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டு தை மாதம் இரண்டாம் திகதிக்காக காத்திருந்தாள்.
தந்தையும் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற கூலிப் பணத்தில் ஏனைய  இரண்டு பிள்ளைகளுக்கும் பாடசாலைக்குரிய கற்றல் உபகரணங்களை  வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மத்தியில் பெற்றுக்கொடுத்துள்ளார். கனுசியா தான் பெரிய பள்ளிக் கூடத்திற்கு போகப்போறன் என்ற மகிழ்ச்சியை அயல்வர்களுடனும் பெற்றோர்களுடனும் சதோரர்களிடம் அடிக்கடி வெளிப்படுத்தியே அந்த நாளுக்காக காத்திருந்தாள். சில வேளை தாயுடன் ஏ9 வீதியால் சென்று வரும் போது தான் படிக்கப்போகும் பாடசாலையை காட்டி இதுதான் என்னுடைய பாடசாலை என பெருமிதத்துடனும் பல  தடவைகள் கூறியிருக்கின்றாள்.
விடுமுறை நாட்களில் தரம் ஆறுக்குரிய புதிய புத்தகங்கள் மற்றும் கொப்பிகளுக்கு   ஆசையோடு உறைகள் போட்டு அவற்றில் தனது பெயர் தரம் என்பவற்றையும் எழுதியதோடு பாடசாலையின் பெயரையும் கிளிநொச்சி மத்திய கலலூரி என எழுதி கனவுகளோடு இருந்திருக்கிறாள் கனுசியா.
அவள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது வழமைக்கு மாறாக கனுசியா நேரத்தோடு எழும்பி குளித்துவிட்டு புதிய சீருடையும் அணிந்து சுவாமி அறைக்குள் சென்று கடவுளை வணங்கி புதிய புத்தக பையை சுமந்தபடி தாயுடன் கிளிநொச்சி மத்திய கல்லூரி நோக்கி வெள்ளை பட்டாம் பூச்சியாய்  பறக்கிறாள். பாடசாலை முதலாம் தவணைக்காக 02-01-2017 இல் ஆரம்பித்தாலும் தரம் ஆறுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நாள் 06-01-2017 ஆக பாடசாலையால் அறிவிக்கப்பட்டிருந்ததால் கனுசியாவும் ஆறாம் திகதி ஆறாம்  ஆண்டில் காலடி வைக்க சென்றிருக்கிறாள்.

கனுசியா போன்று பலரும் வந்திருக்கின்றார்கள். அதில் பலர் அவளுடன் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற நண்பர்களும் நண்பிகளும். ஒவ்வாருவராக அழைத்து பாடசாலை நிர்வாகம் அவர்களது விண்ணப்பங்களை பெற்று அனுமதி வழங்கி வகுப்பறைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அவர்கள் செல்லும் போது  சிலர் கனுசியாவை பார்த்து உனக்கும் கதிரை பிடிச்சி வைக்கிறன் கெதியா வாடி என்று அழைப்பும் விட்டிருக்கின்றார்கள். கனுசியாவும் வகுப்புக்குச் செல்லும் ஆவலோடு காத்திருக்கிறாள்.
இப்பொழுது பாடசாலை நிர்வாகம் கனுசியாவின் விண்ணப்பத்தை பரிசீலிக்கிறது. கனுசியா தாயின் அருகில் நிற்கிறாள். ஒரு சில நிமிடங்களில் அதிபர் கூறுகின்றார் இவவுக்கு இங்க அனுமதியில்லை  நீங்கள் வேறு பாடசாலையில் சேருங்கோ என்று.  தாய் ஏன் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் படித்த பிள்ளையை இங்கதானே சேர்க்கவேண்டும் என்கிறார். இல்லை  அப்படி எந்தச்  சட்டமுமில்லை இங்கு இடவசதியும் போதாது அதனைவிட இவவுக்கு தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் 62  புள்ளிகள் இங்கு சேர்ப்பது என்றால் 70 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் அதிபர். கனுசியா எதுவும் அறியாதவளாய் விழிகள் அகல விரிய தாயுக்கும் அதிபருக்கும் இடையே நடக்கும் உரையாடலில் இருவரது முகங்களையும் மாறி மாறி பார்க்கின்றாள்.
தொடர்ந்தும் தாய் இங்கு 27 புள்ளிகள் பெற்ற மகளுடன் படித்த  மாணவர்களையும் சேர்த்துள்ளீர்கள் என சுட்டிக்காட்ட, அவர்கள் எங்கள் பாடசாலையின் சூழலில் உள்ள மாணவர்கள் என அதிபர் பதிலளிக்கின்றார்.  கனுசியாவின் சகோதரியும் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில்  தரம் மூன்றில் கல்வி கற்கின்றார் எனவே  கனுசியாவை இங்கு சேர்த்தால்தான்  பாடசாலைக்கு பிள்ளைகளை ஏற்றி இறக்குவதிலும் வசதியாக இருக்கும் என கனுசியாவின் தாய் தன்னால் இயலுமானவரை காரணங்களையும் கூறிவிட்டார். ஆனால் அதிபர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.
கனுசியாவின் தாய் தனது இருக்கையில் இருந்து எழுந்துவெளியே வர தன்னை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்பதை புரிந்துகொண்டவளாய் வெளியேறுகிறாள். தன்னோடு படித்த பள்ளித்தோழிகள் வகுப்பறைக்குள் செல்ல கனுசியா தாயோடு வீதிக்கு வருகிறாள்  வீட்டுகுச் செல்ல.  கனுசியாவின் கனவுகள் உடைந்துபோகின்றன. அவளது ஆசைகள்  அழிக்கபடுகின்றதாய் உணர்கிறாள் காலையில் கடவுளிடம் நடந்த பிரார்த்தனை பொய்யாகிவிட்டது என அறிகிறாள். இப்படி அளவது உணர்வுகள் பலவிதமாய் காணப்படுகிறது. வீடு செல்லும் வரைக்கும் இருவரும் அமைதி. வீட்டைச் சென்றடைந்தும் தாயிடம் ஏன் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை? எப்பொழுது சேர்ப்பார்கள்?  எனக் கேள்விகளை கேட்கின்றாள் தாயும் நடந்தவற்றை பக்குவமாய் சொல்லி திங்கள் கிழமை கல்வித்திணைக்களத்திற்குச் சென்று அனுமதி பெற்று சேர்த்துவிடுகிறேன் கவலைப்படாதே என கூறி சமாதானப்படுகிறார். என்னை விட குறைவான மார்க்ஸ் எடுத்தவர்கள் சேர்கின்றார்கள் ஏன்  என்னை சேர்க்கவில்லை எனத் திரும்பவும் கேள்வி தாயிடம் பதில் இல்லை.
புதிய புத்தகபை, கொப்பிகள், எல்லாம் பக்குவமாய் மேசைகக்கு செல்கிறது. சீருடையை கழற்றும் போது மாத்திரம் கண்கள் பனித்தன என்கிறார்  தாய்.
திங்கள் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு செல்கின்றார்கள் அனுமதி வழங்குமாறு கடிதம்  வழங்கப்படுகிறது. மறுபடியும் பாடசாலைக்கு வருகின்றார்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. மீண்டும் வலயம் செல்கின்றனர் வேறுபாடசாலைகளில் சேர்க்குமாறு கடிதம்  வழங்க்கப்படுகிறது. இதனை தவிர கிராம அலுவலர் கடிதத்தை பெற்றுவருமாறு கூறப்படுகிறது. தாய் அதனையும் பெற்றுக்கொடுகின்றார் இருந்தும் எதுவும் நடக்கவில்லை. மகளுடன் வேறு இரண்டு பாடசாலைகளுக்கு செல்கின்றார்  அனுமதி தருமாறு மன்றாடுகின்றார் ஆனால் அங்கும் எதுவும் நடக்கவில்லை.
இப்படி பதினெட்டு நாட்களாக அழைந்து திரிகின்றார் கனுசியாவை பாடசாலையில் சேர்த்துவிடுவதற்கு ஆனால் எங்கும் எதவும் நடக்கவில்லை. பாடசாலைகளில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெறுகிறது. புதிய புத்தகங்களில் பல பாடங்கள் கற்பிக்கப்பட்டுவிட்;டன. ஆனால் 19-01-2016 வரை கனுசியாவுக்கு எந்தப் பாடசாலையிலும் அனுமதி கிடைக்கவில்லை.
என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்கமாட்டார்களா? நான் இனி படிக்க முடியாதா? பள்ளிக் கூடம் போகாத பிள்ளைகளை பிடித்து வந்து படிக்கச் சொல்கின்றார்கள் நான் பள்ளிக் கூடம் போயும் என்னை ஏன் எடுக்கினம் இல்லை என கேள்விகள் தொடர்கிறது பாவம் பதினொரு வயது சிறுமி பல விதமாய் யோசித்து யோசித்து விரக்தியாய் நிற்கின்றாள். அவளது கேள்விகளுக்கு தாயிடம் இருந்து இப்போது கண்ணீர் மாத்திரமே பதிலாக வருகிறது.
சிறுவர் உரிமைகள், கல்வி உரிமைகள், அடிப்படை உரிமைகள் என எல்லா உரிமைகளும் இருக்கிறது ஆனால் கனுசியாவுக்கு எதுவுமில்லை இதுவரைக்கும்.
குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மு.தமிழ்ச்செல்வன்
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.