Breaking News
recent

அழிவின் விளிம்பில் தமிழ் சமூகம்..! ஹம்சிகாவின் மரணம் கற்றுத்தந்தது என்ன..?



கொடிய யுத்தம், குண்டு மழை பொழிவு, சிதறிய உடலங்கள், இரத்த கறை, கண்ணீர், கதறல் என சில ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகள் காணப்பட்டன.

எனினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சில மாற்றங்கள் தமிழர்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், கண்ணீர், கதறல் என்பவற்றுக்கு மட்டும் முடிவு எட்டப்படவில்லை.

யுத்த காலப்பகுதியில் கூட அச்சமின்றி வாழ்ந்த தமிழர்கள் இன்று அச்சத்தின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இன்று தமிழர் பகுதிகளில் இடம்பெறும் சமூகவிரோத செயற்பாடுகளே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

கொலை, கொள்ளை, வாள் வெட்டு, பாலியல் துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை என வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் பகுதிகளில் சமூக விரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு என்பது தமிழர் பகுதிகளில் மிகவும் மோசமான ஒரு நிலையை அடைந்துள்ளது. அண்மைய கால சம்பவங்கள் இதனை நியாயப்படுத்தி இருக்கின்றன.

இந்நிலையானது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரே ஏற்பட்டுள்ளதாக அரசியல் தலைமைகள் பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழ்கள் பகுதிகளில் நுண் கடன் திட்டம் ஒரு பக்கம் பெண்களை அழித்து வருகின்ற நிலையில், மற்றும் ஒரு பக்கம் வன்கொடுமைகள் பெண்களை அழித்து வருகின்றன.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்கள் எங்கள் மத்தியில் இருந்து மறைவதற்கு முன்னரே, அடுத்தடுத்த சம்பவங்கள் எங்களை அச்சமடைய செய்கின்றன.

வித்தியா, ஹரிஸ்னவி என ஆரம்பித்த படுகொலைகள் இன்று ஹம்சிகா வரையில் வந்து நிற்கின்றது. ஆம் கடந்த 24ஆம் திகதி யாழ். ஊர்காவற்துறை பகுதியில் வைத்து ஏழு மாத கரப்பிணி பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

யாழ். ஊர்காவற்துறை - சுருவில் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண்ணான ஹம்சிகா வீட்டில் தனிமையில் இருந்த போது மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தினால் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் சந்தேக நபர்களை அடையாளம் காட்ட முடியும் என 12 வயதான சிறுவன் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த பெண் தலையின் பின்புறத்தில் தாக்கியும், கழுத்து பகுதியில் வெட்டியும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். குறித்த பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா? என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த படுகொலை சம்பவம் இந்நாட்டில் உள்ள பெண்கள் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அத்துடன், நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது.

நாட்டில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பு குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை ஹம்சிகாவின் மரணம் எங்களுக்கும், இந்த சமூகத்துக்கும் கற்றுத்தந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க இன்று தமிழர்கள் பகுதிகளில் தலைவரித்தாடும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு காரணம் என்ன..? என்ற கேள்வியும், எங்கள் மத்தியில் எழுகின்றன.

காரணம் வடக்கு கிழக்கில் அரச படையினர் அதிகளவில் நிலைகொண்டுள்ள போதிலும், இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றதா..? என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஒரு இனத்தின் கலாச்சார கட்டமைப்பு அழிக்கப்படும் போது அந்த இனம் இயல்பாக அழிந்து போய்விடும்.

அவ்வாறான ஒரு நடவடிக்கையே இன்று தமிழர்கள் பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சிறந்த சமூக கட்டமைப்பை கொண்டிருந்த தமிழர் பகுதிகள் இன்று சிதைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த காலங்களில் தமிழர்கள் பகுதிகளில் இடம்பெற்ற படுகொலை மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குறித்த வழக்கு விசாரணைகள் விரைவு படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு உச்சபட்சமான தண்டணை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அப்போது மட்டுமே இவ்வாறான குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும். இல்லாது போனால் வித்தியா, ஹரிஸ்னவி, ஹம்சிகா என்ற இந்த பட்டியல் நீண்டுகொண்டு போகும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.