Breaking News
recent

யாழில் புலிகளால் வீழ்த்தப்பட்ட விமானப்படை விமானம் தொடர்பில் யாழ் மேல் நீதிமன்றில் இளஞ்செழியனின் உத்தரவு..



இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தை யாழில் வைத்து தாக்குதல் நடாத்தி நான்கு பேரை கொலை செய்த வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.


இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று யாழ்.மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கில் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கடந்த 17ஆம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மேலதிக சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.

அதற்கமைய, ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து எவ்வித தகவலும் கிடைக்காமையால் விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் யாழ்ப்பாணத்தில் வைத்து வீழ்த்தப்பட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்பினால் ஏவுகணைத் தாக்குலுக்கு இலக்காகியே குறித்த விமானம் வீழ்த்தப்பட்டது.

இதில் விமானத்தின் விமானப்படை அதிகாரி, விமானி, விமானப்படை சாஜன், விமானப்படை கோப்ரல் போன்ற நால்வர் கொல்லப்பட்டனர்.

குறித்த குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் நவாலி வடக்கு – மானிப்பாயை சேர்ந்த தில்லைராஜா என்பவர் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி குறித்த நபரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

வாக்குமூலத்தின் பிரகாரம் சம்பவம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ். மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் முக்கிய ஆதாரமாக சந்தேகநபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த ஒப்புதல் வாக்குமூலம் சுதந்திரமாக பதிவு செய்யப்படவில்லை என சந்தேகநபர் மன்றில் தெரிவித்த நிலையில் அதை நீதிபதி நிராகரித்திருந்தார்.

குறித்த வழக்கில் வேறு சாட்சிகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை சட்டமா அதிபர் ஊடாக மன்றில் ஆஜர்படுத்தும்படியும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதிவாதிக்கு எதிரான பிறிதொரு வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.