Breaking News
recent

கைத்துப்பாக்கியை வீட்டார் மீது நீட்டி உங்கள் பிள்ளையை சுட்டு போட்டுவிட்டு செல்வோம்-மிரட்டிய பொலிசார்

யாழ்.பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் நேற்று அதிகாலை கைதுப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

யாழ்.பிரம்படி இரண்டாம் ஒழுங்கையில் உள்ளவீடொன்றின்மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை குறித்த கைத்துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரின் மகன் கடந்த காலங்களில் யாழ்.நகர் பகுதியில் உள்ள இளைஞர் குழு ஒன்றுடன் முரண்பட்டு உள்ளார். அதனை அடுத்து அக்கால பகுதியில் ஒருநாள் இரவு இளைஞன் முரண்பட்ட இளைஞர் குழு அத்துமீறி இளைஞனின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலில் இளைஞனின் வீட்டு யன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்கான வீட்டார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலாளிகள் இனம் காணப்பட்டனர்.

அதனை அடுத்து தாக்குதலாளிகளுக்கும் , தாக்குதலுக்கு இலக்கான வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் பொலிசார் சமரசம் செய்து வைத்து தக்குதலாளிகளிடம் இருந்து வீட்டின் உரிமையாளருக்கு நஷ்ட ஈடும் பெற்றுக் கொடுத்து உள்ளனர்.


அதன் பின்னர் யாழ்.நகர் பகுதியில் அண்மையில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்களை அடுத்து , குறித்த இளைஞனுக்கு அந்த தாக்குதல் சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பிருக்கா எனும் சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து இருந்துள்ளனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நான்கு பொலிசார் சீருடையுடனும் ஐந்து பேர் சிவில் உடையிலும் பிரம்படி இரண்டாம் ஒழுங்கையில் உள்ள இளைஞன் வீட்டுக்கு சென்று இளைஞன் குறித்து வீட்டாரிடம் விசாரித்து உள்ளனர்.

பின்னர் வீட்டாரிடம் இளைஞனின் புகைப்படம் ஒன்றினை தருமாறும் கோரியுள்ளனர். அதனை அடுத்து இளைஞனின் புகைப்படத்தை எடுப்பதற்காக இளைஞனின் பெண் சகோதரி வீட்டினுள் சென்ற வேளை சில பொலிசார் வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்து போட்டோ அல்பத்தினை பறித்து செல்ல முற்பட்டனர்.

அதற்கு வீட்டில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க , ஒரு பொலிசார் கைத்துப்பாக்கியை வீட்டார் மீது நீட்டி உங்கள் பிள்ளையை சுட்டு போட்டுவிட்டு செல்வோம் , பிள்ளையின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை காட்டி பிள்ளையின் சடலத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

அதனை அடுத்து வீட்டார் இரவு 7.30 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்று , பொலிசார் அத்துமீறி வீட்டினுள் நுழைந்தது , கைத்துப்பாக்கி காட்டி மகனை சுடுவோம் என மிரட்டியது தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்தனர்.

அதன் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் குறித்த வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலும் வீட்டார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து வீட்டார் தெரிவிக்கையில் ,

நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த பொலிசார் எமது மகன் தொடர்பில் விசாரித்தனர். எமது மகன் எங்களுடன் தற்போது இல்லை கிளிநொச்சியில் , தங்கி நின்று வேலை பார்க்கின்றார் என கூறினோம்.

அப்போது மகனின் படம் ஒன்று தாருங்கள் என கேட்டனர். அதனை அடுத்து மகனின் படத்தை எடுக்க மகள் வீட்டினுள் சென்ற வேளை மகளின் பின்னால் பொலிசாரும் வீட்டினுள் அத்து மீறி நுழைந்து அறைக்குள் சென்று போட்டோ அல்பத்தை தம்முடன் எடுத்து செல்ல முற்பட்டனர். அதற்கு நாங்கள் அனுமதிக்காது , பொலிசாருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட போது , வீட்டினுள் இருந்த பொலிசாரின் ஒருவர் எம்மை நோக்கி கைத்துப்பாக்கியை நீட்டி உங்கள் மகனை சுட்டு போடுறோம். மகனின் பிறப்பத்தாட்சி பத்திரத்தை கொண்டு வந்து காட்டி மகனின் சடலத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என எம்மை மிரட்டி விட்டு சென்று இருந்தனர்.

அது தொடர்பில் நேற்று முன்தினம் இரவு யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். பின்னர்  நேற்று   அதிகாலை 4 மணியளவில் வீட்டின் முன் பக்கம் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது, அதனை அடுத்து வெடி சத்தம் ஒன்றும் கேட்டது. நாம் அதனை பெரிது படுத்தவில்லை.

காலை எழுந்து வீட்டின் முன் பக்கம் பார்த்த போது வீட்டின் சுவரில் துப்பாக்கி சன்னம் பாய்ந்த அடையாளம் காணப்பட்டதுடன் வீட்டு கேற்றடியில் , துப்பாக்கி சன்னத்தின் வெற்றுக் கோது ஒன்றும் காணப்பட்டது.

அதனை அடுத்து மீண்டும் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்று துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினோம். அதனை அடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு விட்டு வீட்டின் முன் பகுதியில் இருந்த துப்பாக்கி சன்னத்தின் வெற்றுக் கோதினை தம்முடன் எடுத்து சென்றனர்.

அதன் பின்னர் மாலை எமது வீட்டுக்கு வந்த தடவியல் பிரிவை சேர்ந்த பொலிசார் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுன் துப்பாக்கி சன்னம் பாய்ந்த சுவரினையும் ஆராய்ந்ததுடன் அப்பிரதேசத்தையும் ஆராய்ந்தனர்.

அத்துடன் துப்பாக்கி சன்னத்தின் வெற்றுக்கோதினை காலையில் பொலிசார் தம்முடன் எடுத்து செல்ல எம்மை அனுமதித்து இருக்க கூடாது என்றும், அதனையும் நாம் ஆராய்ந்து இருக்க வேண்டும் பொலிசார் தம்முடன் எடுத்து சென்று விட்டதனால் அது தொடர்பில் தம்மால் இனி ஆராய முடியாது எனவும் எமக்கு தெரிவித்தனர் என வீட்டார் தெரிவித்தனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.