Breaking News
recent

நல்லூர் ஆலய சூழலில் ‘டெங்கு’ நோயை பரப்பும் யாழ்.மாநகரசபை!

யாழ். மாநகரசபைக்குட்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில், றியோ கிறீம் கவுஸ்க்கு முன்பக்கமாகவும், இடித்தழிக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபிக்கு பின்பக்கமாகவும் அமைந்துள்ளது பிராமணக்கட்டுக்குளம்.

இந்தக் குளத்தில் பிளாஸ்டிக் மற்றும் திண்மக்கழிவுகள் நாளாந்தம் கொட்டப்படுவதால், அழுக்குகளால் நிரம்பியுள்ள குளம் துர்நாற்றம் வீசுவதுடன், டெங்கு மலேரியா போன்ற கொடிய நோய்களை பரப்பும் நுளம்புகளும் பல்கிப் பெருக்கமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தம்மிடம் சோலை வரியை குறிப்பிடப்பட்ட திகதியில் அறவிடுவதில் மட்டும் குறியாக செயற்படும் மாநகரசபை, இக்குளத்தை சுத்தப்படுத்தி அழகுபடுத்தி தருமாறு தாம் பலமுறை விடுத்த கோரிக்கையை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்றும்,

இதனால் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் என்று பலரும் நுளம்புக்கடியால் அவஸ்தைப்படுவதாகவும், மரண பயத்துடன் சீவித்து வருவதாகவும் நல்லூர் ஆலய சூழலில் வசிப்பவர்கள் அச்சம் வெளியிட்டனர்.

மேலும் இந்த குளத்தைச் சுற்றியுள்ள பற்றைக்காடுகள் போதைவஸ்து பாவனை மற்றும் தகாத நடத்தைகளின் கூடாரமாக விளங்குவதால் சமுக விரோத நடவடிக்கைகள் காலை - மாலை - இரவு வேளைகளில் அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும்,

இதுதொடர்பில் தாம் பலதரப்பட்ட முறைப்பாடுகளை யாழ்.மாநகரசபையிடம் தெரிவித்துள்ள போதிலும், யாழ்.மாநகரசபையினர் இவற்றை கண்டுகொள்வதேயில்லை என்றும் அப்பகுதி மக்கள் தமது கவலையையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.

றியோ கிறீம் கவுஸ்க்கு முன்பக்கமாக மோசமாக அழுக்கடைந்து துர்நாற்றம் வீசும் பிராமணக்கட்டுக்குளத்தை தாம் புனரமைத்து அழகுபடுத்தி வாடகை மற்றும் நிலவரியையும் தாமே கட்டுவதாக றியோ கிறீம் கவுஸினர் சமுக நல நோக்கத்தில் விடுத்த கோரிக்கையையும் யாழ்.மாநகரசபை நிர்வாகம் புறக்கணித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

போதைவஸ்து குற்றங்கள், சமுக விரோத நடத்தைகளின் கூடாரமாக விளங்கும் பிராமணக்கட்டுக்குள சுற்றுச்சூழல். இதற்கு யாழ்.மாநகரசபையினரும் அனுசரணையாக இருந்து செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் தெரிவிக்கின்றனர்.


நல்லூரின் பின்வீதியில் யாழ்.மாநகரசபையின் சுகாதாரப்பிரிவின் பிரதான அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள குறித்த குளத்தை பராமரிப்பதை விடுத்து,


சாதாரண பொதுமக்கள் தமது வீடுகளில், றம்புட்டான் பழக்கோதில் தேங்கி நிற்கும் நீரில் டெங்கு நுளம்பு பெருகும் சூழலை பேணி வருவதாக குற்றம் கூறி அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவரும் யாழ்.மாநகரசபையின் சுகாதாரப்பிரிவினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவது யார்?


கௌரவ நீதிபதி இளஞ்செழியன் அவர்களே... இது உங்களின் கவனத்துக்கு...
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.