Breaking News
recent

ஊடகங்கள் அனைத்தும் தமது பொறுப்புக்களை நேர்மையாக நாட்டின் நலன் கருதி நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி

தகவல் அறிவதற்கான உரிமை தொடர்பிலான சர்வதேச தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்றது.

இன்று ஆரம்பமான தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச மாநாட்டில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இந்திய சட்ட ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அஜித் பிகாஸ் ஷா உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்ததாவது,
ஊடகங்களில் நாம் காணும் அநேகமான விடயங்களுக்கு அமைய, ஊடகங்கள் எந்தளவு நியாயமாகவும் பண்பாகவும் செயற்படுகின்றன என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஊடக சுதந்திரம் தொடர்பான சட்டத்தை அரசியலமைப்பின் ஊடாக எந்தளவு உறுதிப்படுத்தினாலும், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் உரிமையாளர்கள், அவற்றின் முகாமைத்துவத்தின் விருப்பு, வெறுப்புக்கள், உத்தரவுகள் மற்றும் கருத்துக்களுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. நாம் அனைவரும் எமது மனசாட்சியிடம் கேட்க வேண்டும். நாம் கதைக்கும் ஊடக சுதந்திரத்திற்கு நாம் எந்தளவு இடமளிக்கின்றோம், இடமளித்துள்ளோம் என்பதே முக்கியமாகும். ஊடக சுதந்திரத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் பொறுப்பு அரசியல்வாதிக்குள்ளது. அதனை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அரச அதிகாரிக்குள்ளது. அரச மற்றும் தனியார் ஊடகங்கள் அனைத்தும் தமது பொறுப்புக்களை நேர்மையாக நாட்டின் நலன் கருதி நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அரசாங்கமும் எதிர்பார்கின்றது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.