Breaking News
recent

அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி டோனி மேலுமொரு சாதனை

ஹராரே, 


இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மேலுமொரு புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய மைல்கல் சாதனையை மகேந்திரசிங் டோனி நிகழ்த்தியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பும்ரா பந்துவீச்சில் எல்டன் சிகும்பராவின் கேட்சை பிடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்கள் வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை டோனி பெற்றுள்ளார்.

இந்த மைல்கல்லை எட்டும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோனி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இலங்கை வீரர் சங்ககாரா முதலிடத்தில் உள்ளார். 404 போட்டிகளில் பங்கேற்றுள்ள சங்ககாரா, 383 கேட்ச்கள், 99 ஸ்டெம்பிங்கள் என 482 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 472 விக்கெட்களுடன் 2ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் பவுச்சர் 424 விக்கெட்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் டோனி 4ம் இடத்தை பிடித்துள்ளார்.

ஹராரேயில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 42.2 ஓவர்களில் 123 ரன்னில் சுருண்டது. சிபந்தா அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், யசுவேந்திரா சஹால் 2 விக்கெட்டும், அக்சர்பட்டேல், குல்கர்னி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 21.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 126 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராகுல் 63 ரன்னும், பாய்ஸ் பாசல் 55 ரன்னும் எடுத்தனர்.இந்த வெற்றி மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்தது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது.

டோனி தலைமையில் இந்திய அணி 3 முறை ஒருநாள் தொடரில் ‘ஒயிட்வாஷ்’ செய்துள்ளது. இதன்மூலம் முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் பெற்றார்.

இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 5-0 என்ற கணக்கிலும்,  2011-ம் ஆண்டு அதே இங்கிலாந்துக்கு எதிராக 5-0 என்ற கணக்கிலும் ஒயிட்வாஷ் செய்து இருந்தது.  தற்போது ஜிம்பாப்வே அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது.

2013-ம் ஆண்டு வீராட்கோலி தலைமையில் 5-0 என்ற கணக்கிலும், 2015-ல் ரகானே தலைமை யில் 3-0 என்ற கணக்கிலும் ஜிம்பாப்வேயை அந்நாட்டு மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இருந்தது.

டோனி தலைமையில் ஒருநாள் போட்டியில் இந்தியா பெற்ற 107-வது வெற்றியாகும். இதன்மூலம் அவர் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்களில் 2-வது இடத்தில்  இருக்கும்   ஆலன் பார்டரை (ஆஸ்திரேலியா) சமன் செய்தார். ரிக்கிபாண்டிங் 165 ஒருநாள் போட்டியில் வென்று முதல் இடத்தில் உள்ளார்.

ஒருநாள் தொடரை போலவே இந்தியா- ஜிம்பாப்வே இடையே மூன்று 20 ஒவர் ஆட்டம் நடைபெறுகிறது. முதல் போட்டி வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.