Breaking News
recent

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பெண் பரிசோதகரின் மரணத்தில் சந்தேகம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் பரிசோதகர் ஒருவர் மூன்று நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – விநாயகபுரத்தைச் சேர்ந்த 44 வயதான ராசா றமணி என்ற சுகாதார பரிசோதகர், கடந்த 4 ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அன்றிரவே விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் மறுநாள் காலை உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வைத்தியவர் ஜெயவர்த்தன மற்றும் கிளிநொச்சி மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி க.திருலோகமூர்த்தி ஆகியோர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து சடலம் யாழ். போதானா வைத்தியசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் சாதரண நிலைமைக்கு திரும்பிய நிலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நோயாளி அன்றிரவு மீண்டும் சுகயீனம் காரணமாக அவதிப்பட்டுள்ளார் என்றும் ஆனால் வைத்தியர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும், இதனாலேயே அவர் இறந்துள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மா.ஜெயராசாவிடம் வினவியபோது,
வைத்தியசாலையின் பெண் பரிசோதகர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மூளைக் காய்ச்சலுக்கான சிகிச்சையளிக்கப்பட்டு, நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியசாலையின் கவனயீனமும் காரணமா எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே உடற்கூற்று பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பான உண்மை நிலைமையைத் தெரியப்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், காச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று பூரண சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
NewJaffna Media.....
Thank You...
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.